காலி மதுபாட்டில்களை டாஸ்மாக் பணியாளர்கள் கண்டிப்பாக திரும்ப பெற வேண்டும்: அமைச்சர் முத்துசாமி


காலி மதுபாட்டில்களை டாஸ்மாக் பணியாளர்கள் கண்டிப்பாக திரும்ப பெற வேண்டும்: அமைச்சர் முத்துசாமி
x

காலி மதுபாட்டில்களை வெளியே போடும்போது விவசாயம் பாதிக்கப்படுகிறது என்று அமைச்சர் முத்துசாமி கூறினார்.

ஈரோடு,

ஈரோட்டில், வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சோலார் புதிய பஸ் நிலையத்தில் கழிப்பறை, குடிநீர், மின் விளக்குகள் என அனைத்து வசதிகளும் உள்ளன. அங்கு கட்டப்பட்டுள்ள கடைகள் ஏலம் விடப்பட்டுள்ளன. ஏலம் எடுத்தவர்கள், கடைகள் அமைக்க அவகாசம் தேவைப்படுகிறது. பயணிகள் அதிகரிக்கும் பட்சத்தில் அங்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படும்.

காலி மதுபாட்டில்களை வெளியே போடும்போது விவசாயம் பாதிக்கப்படுகிறது. நீலகிரியில் வனவிலங்குகள் பாதிக்கப்பட்டதால் தான், காலி மதுபாட்டில்கள் திரும்ப பெற வேண்டும் என்றும் அதற்கான திட்டத்தை வகுக்க வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி தான், காலி மதுபாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. கோர்ட்டு கொடுத்த கால அவகாச அடிப்படையில் பணிகளை முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

காலி மதுபாட்டில்கள் திரும்ப பெறுவதில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு கூடுதல் பணி சுமை இருப்பதை ஒப்புக்கொள்கிறோம். அதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதுவரை, காலி மதுபாட்டில்களை டாஸ்மாக் பணியாளர்கள் கண்டிப்பாக திரும்ப பெற வேண்டும். இந்த விவகாரத்தில் தொழிற்சங்கங்கள், பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறோம்.

மதுபாட்டில்கள் வைப்பதற்கு இடம் பற்றாக்குறை இருப்பதால், ஒவ்வொரு நாளும் 2 முறை பாட்டில்கள் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலி மதுபாட்டில்கள் திரும்ப பெறும் விவகாரத்தில், டாஸ்மாக் துறையும், பணியாளர்களும் இணைந்து கோர்ட்டு உத்தரவை முறையாக செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story