தூய்மை இந்தியா திட்டத்தின் நோக்கங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் - வானதி சீனிவாசன்

குப்பைகளை பாறைப் பள்ளத்தில் கொட்டும் யோசனை, இயற்கை வளத்தினை பாழாக்கும் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தூய்மை இந்தியா திட்டத்தின் நோக்கங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் - வானதி சீனிவாசன்
Published on

சென்னை,

தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

திருச்சி அரியமங்கலம் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றுவதற்காக, துவாக்குடி அருகே உள்ள சுமார் 1700 அடி ஆழமுள்ள பாறைப் பள்ளத்தில் குப்பைகளை கொட்டினால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்ற யோசனையை தவெக திருவெறும்பூர் தொகுதி எம்.எல்.ஏ. நவல்பட்டு விஜி தெரிவித்திருப்பது இயற்கை வளத்தினை பாழாக்கும் வகையில் அமைந்துள்ளது.

ஆயிரக்கணக்கான டன் குப்பைகளை ஒரு பள்ளத்தில் கொட்டும் போது, நிலத்தடி நீர்வளம், மண்வளம் மற்றும் இயற்கை நீரோட்டம் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மக்கும் குப்பைகள் கூட இயற்கையாக மண்ணில் கலந்துவிடும். ஆனால் மக்காத பிளாஸ்டிக் மற்றும் நச்சு கழிவுகள் சேர்ந்து கொட்டப்படும் போது அதன் தாக்கம் பல ஆண்டுகள் நீடிக்கும்.

எனவே, தமிழக அரசுக்கு ஏற்கனவே நாம் முன்வைத்திருந்த “கோரிக்கை எண் : 4” - நவீன திடக்கழிவு மேலாண்மை திட்டங்களை உடனடியாக முழுமையாக செயல்படுத்தி, குப்பைகளை மறுசுழற்சி செய்யும் முறைகளை கொண்டு வந்து, தூய்மை இந்தியா திட்டத்தின் நோக்கங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com