இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-10-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 20 Oct 2025 12:16 PM IST
தமிழ்நாட்டில் 500 ஆண்டுகளுக்கு முன்பே தீபாவளி கொண்டாட்டம் - கல்வெட்டுகள் தரும் புதிய தகவல்கள்
தீபாவளி குறித்த குறிப்பு திருப்பதி திருமலை கல்வெட்டில் இடம்பெற்றுள்ளது. தமிழர்கள் தீபாவளி கொண்டாடியதற்கான ஆதாரமாக இக்கல்வெட்டு அமைந்துள்ளது. அதேநேரம் காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில் கல்வெட்டுகளிலும் தீபாவளி குறித்து குறிப்பிடப்பட்டுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
- 20 Oct 2025 10:28 AM IST
இந்திய விண்வெளி மையம் 2035-ம் ஆண்டு நிறுவப்படும்: இஸ்ரோ தலைவர் நாராயணன்
குமரி மாவட்டம் சாமிதோப்பில் இஸ்ரோ தலைவர் நாராயணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-
52 டன் எடை கொண்ட இந்திய விண்வெளி மையம் 5 ராக்கெட் மூலம் விண்ணுக்கு கொண்டு சென்று நிறுவப்பட உள்ளது. இதற்கான முதல் ராக்கெட் வருகிற 2028-ம் ஆண்டு விண்ணில் ஏவப்படும். பின்னர் 4 ராக்கெட் மூலம் விண்வெளி மையம் எடுத்து செல்லப்பட்டு 2035-ம் ஆண்டு நிறுவப்படும். இதற்கான சோதனை இந்த ஆண்டு வெற்றிகரமாக செய்யப்பட்டு உள்ளது. வருகிற டிசம்பர் மாதம் மார்க் 3 ராக்கெட் மூலம் அமெரிக்காவின் 6 ஆயிரம் கிலோ எடை கொண்ட தொலை தொடர்பு செயற்கைக்கோள் விண்ணுக்கு அனுப்பப்படும் என்று கூறினார்.
- 20 Oct 2025 10:22 AM IST
ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து
ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தின் முன் கூடியிருந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் இருகரம் கூப்பியும், கை அசைத்தும் வாழ்த்து தெரிவித்தார். அப்போது ரசிகர்கள் உற்சாகமாக கோஷம் எழுப்பினர். இதுதொடர்பான புகைப்படம், வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- 20 Oct 2025 10:21 AM IST
நாட்டு வெடி வெடித்து 4 பேர் பலி - ஒருவர் கைது
திருவள்ளூரில் நாட்டு வெடி வெடித்து 4 பேர் பலியான விவகாரத்தில், வீட்டின் உரிமையாளர் ஆறுமுகம் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டில் வைத்து நாட்டு வெடி விற்றபோது வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. ஆறுமுகத்தை கைது செய்து பட்டாபிராம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தலைமறைவாக உள்ள விஜய் என்பவரை 2 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- 20 Oct 2025 9:21 AM IST
கூடுதல் வரி டிரம்ப் மிரட்டல்
ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தாவிட்டால் இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார்.
- 20 Oct 2025 9:19 AM IST
சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை
சென்னையில் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. காலையில் இருந்தே லேசான மழை பெய்து வந்த நிலையில், இடையிடையே கனமழை பெய்து வருகிறது. எழும்பூர், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், அமைந்தகரை, கோயம்பேடு உள்பட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.













