இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 02-04-2025


இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 02-04-2025
x
தினத்தந்தி 2 April 2025 9:24 AM IST (Updated: 22 Jun 2025 1:52 PM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 2 April 2025 10:37 AM IST

    தங்கம் விலை மாற்றமின்றி இன்று விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.8,510-க்கும், ஒரு சவரன் ரூ.68,080-க்கும் விற்பனையாகி வருகிறது.

  • 2 April 2025 10:14 AM IST

    கச்சத்தீவை மீட்க கோரும் தீர்மானம் சட்டசபையில் இன்று கொண்டு வரப்படுகிறது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை முன்மொழிகிறார்.

    இலங்கைக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ளும் பிரதமர், அந்நாட்டு அரசுடன் பேசி, அங்கு சிறையில் வாடும் தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்க செய்து, மீட்டுக்கொண்டு வரவேண்டும் என்று அந்த தீர்மானத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்துகிறார்.

    இந்த தீர்மானத்தில் சட்டமன்ற கட்சியினர் விவாதித்த பிறகு, குரல் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படும்.

  • 2 April 2025 9:46 AM IST

    நீலகிரி, கொடைக்கானலில் புதிய கட்டுப்பாடுகளுடன் இ-பாஸ் நடைமுறை நேற்று காலை முதல் அமலுக்கு வந்தது. ஒவ்வொரு நாளும் விண்ணப்பிக்கும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே இ-பாஸ் வழங்கப்பட்டு அனுமதிக்கப்படுகிறது.

    இந்நிலையில், இ-பாஸ் முறையை ரத்து செய்யக்கோரி நீலகிரி மாவட்டத்தில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தெரிவித்துள்ளது. இதேபோல் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பிலும் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என தகவல் தெரிவிக்கின்றது.

  • 2 April 2025 9:29 AM IST

    கோவை மாவட்டம் இருகூர் ரெயில் நிலையத்தில் தண்டவாளம் பராமரிப்பு பணியால் குறிப்பிட்ட ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எர்ணாகுளம்-டாடாநகர் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்.18190) இன்று (புதன்கிழமை) போத்தனூர்-கோவை-இருகூர் வழியாக இயக்கப்படும். ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் (13352) இன்று 25 நிமிடங்கள் வசதியான இடத்தில் நிறுத்தப்படும்.

    திருச்சி-பாலக்காடு எக்ஸ்பிரஸ் (16843) வருகிற 4 மற்றும் 6-ந் தேதிகளில் சூலூரில் இருந்து பாலக்காடுக்கு முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரெயிலாக இயக்கப்படும். இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரி மரியா மைக்கேல் தெரிவித்துள்ளார்.

  • 2 April 2025 9:25 AM IST

    நீலகிரி, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

1 More update

Next Story