இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 04-11-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 4 Nov 2025 3:52 PM IST
பிக்பாஷ் லீக்: அஸ்வின் விலகல்.. காரணம் என்ன..?
பிக்பாஷ் லீக் (பி.பி.எல்), ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிரபலமான டி20 லீக் போட்டியாகும். இதன் 15-வது சீசன் இந்த ஆண்டு டிசம்பர் 14-ந்தேதி முதல் ஜனவரி 25-ந்தேதி வரை ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது.
இந்நிலையில் இந்த பிக்பாஷ் சீசனிலிருந்து முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ரவிச்சந்திரன் அஸ்வின் விலகியுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை அஸ்வின் தனது சமூக வலைதளம் மூலம் அறிவித்துள்ளார்.
- 4 Nov 2025 3:49 PM IST
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், சி.பி.எஸ்.இ நடத்தவிருக்கும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் இந்தி தேர்வுக்கும், அதற்கு முன்னும் பின்னும் உள்ள தேர்வுகளுக்கும் முறையே 2 மற்றும் 4 நாள்கள் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், தமிழ்ப் பாடத்தேர்வுக்கு முன்னும், பின்னும் உள்ள தேர்வுகளுக்கு ஒரு நாள் மட்டுமே இடைவெளி விடப்பட்டிருக்கிறது. பொதுத்தேர்வுகளில் கூட மொழி வேறுபாடு காட்டப்படுவது கண்டிக்கத்தக்கது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு பொத்த்தேர்வுகளுக்கான இறுதி செய்யப்பட்ட கால அட்டவணை கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி தொடங்கும் சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் தேர்வாக பிப்ரவரி 17ஆம் தேதி கணிதப் பாடத் தேர்வு நடைபெறவுள்ளது. பிப்ரவரி 21ஆம் தேதி ஆங்கிலம், 23ஆம் தேதி தமிழ் மற்றும் மாநில மொழிகள், 25ஆம் தேதி அறிவியல், 27ஆம் தேதி கணினி அறிவியல் சார்ந்த பாடங்கள், மார்ச் 2ஆம் தேதி இந்தி, மார்ச் 7ஆம் தேதி சமூக அறிவியல் பாடத் தேர்வுகள் நடைபெறும் என்று சி.பி.எஸ்.இ அறிவித்திருக்கிறது. இந்த அட்டவணை தமிழ் பயிலும் மாணவர்களுக்கு எதிராக அமைந்திருக்கிறது.
- 4 Nov 2025 3:44 PM IST
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் அன்னாபிசேகம்- திரளான பக்தர்கள் தரிசனம்
ஐப்பசி மாதம் பௌர்ணமி தினத்தன்று சிவலிங்கத்துக்கு அன்னத்தால் அலங்காரம் செய்து வழிபடுவது வழக்கம். அன்னாபிஷேகத்தை தரிசனம் செய்பவர்கள் பூர்வ ஜென்ம பாவம், வறுமை நீங்கி எல்லா வளமும் பெறலாம் என்பது ஜதீகம். அதன்படி ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு திருவாரூர் பகுதியில் உள்ள சிவன் கோவிலில் சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிசேகத்துடன், சமைக்கப்பட்ட அன்னம் சாத்தப்பட்டு அன்னாபிஷேகம் நடந்தது.
திருவாரூர் தியாகராஜர் கோவில் உள்ள மூலவர் வன்மீகநாதருக்கு சிறப்பு அபிசேகம் நடந்தது. பின்னர் சமைக்கப்பட்ட அன்னத்தை சிவலிங்கத்திற்கு சாத்தப்பட்டு அன்னாபிசேகம் நடந்தது.
- 4 Nov 2025 3:40 PM IST
முதல் ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சு தேர்வு
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது. அடுத்து நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் இன்று தொடங்குகிறது. அதன்படி பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் ஒருநாள் போட்டி பைசலாபாத்தில் இன்று நடைபெறுகிறது.
- 4 Nov 2025 3:38 PM IST
பொன்முடி, சாமிநாதனுக்கு திமுக துணை பொதுச்செயலாளர் பதவி - மு.க.ஸ்டாலின் உத்தரவு
முன்னாள் அமைச்சர் பொன்முடி, தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சுவாமிநாதன் ஆகிய இருவருக்கும் தற்போது திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது துணைப் பொதுச் செயலாளராக சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளதால், அவர் வகித்து வந்த திருப்பூர் கிழக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக இல.பத்மநாபன் நியமிக்கப்படுகிறார். திருப்பூர் தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக கே.ஈஸ்வரசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
அடுத்ததாக, வேலூர் மாவட்டம் வேலூர் வடக்கு, வேலூர் தெற்கு என்று இரண்டு மாவட்டக் கழகங்களாக திமுக பிரித்துள்ளது. இதையடுத்து வேலூர் தெற்கு (வேலூர் அணைக்கட்டு, குடியாத்தம்) மாவட்ட செயலாளராக ஏ.பி.நந்தக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். வேலூர் வடக்கு (காட்பாடி, கீழ்வைத்தியாணான்குப்பம்) மாவட்ட செயலாலராக அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் நியமிக்கப்படுகிறார்.
- 4 Nov 2025 3:21 PM IST
ஆட்சிக்கு வந்தால் பொங்கல் பண்டிகை தோறும் மகளிருக்கு ரூ.30,000 நிதி: தேஜஸ்வி யாதவ்
நாங்கள் ஏற்கனவே பெண்களுக்காக அறிவித்த திட்டங்களை தாய்மார்களும் சகோதரிகளும் அதிக அளவில் வரவேற்றுள்ளனர். வரும் ஜனவரி 14ஆம் தேதி மகர சங்கராந்தி பண்டிகை வர இருக்கிறது. இது மக்களுக்கு ஒரு புதிய ஆண்டு. பெண்களுக்காக நாங்கள் அறிவித்த திட்டத்தின் கீழ் மகர சங்கராந்தியன்று பெண்களின் வங்கிக் கணக்குகளில் தலா ரூ.30,000 வரவு வைக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் மகர சங்கராந்தியை முன்னிட்டு இந்த நிதியுதவி வழங்கப்படும். அந்த வகையில், இந்த திட்டத்தின் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் நமது பெண்கள் ரூ.1.5 லட்சம் நிதி உதவி பெறுவார்கள். பணவீக்கம் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நிதியுதவி அவர்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்,” என்றார்.
- 4 Nov 2025 2:54 PM IST
அன்புமணி பற்றிய பல உண்மைகள் எனக்கு தெரியும்: பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் பரபரப்பு பேட்டி
சேலம் வாழப்பாடியில் பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் மற்றும் அவருடைய ஆதரவாளர் சென்ற கார்கள் மீது இன்று திடீரென தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. அப்போது, ஆதரவாளர்கள் தடுக்க முயன்றபோது அவர்கள் மீதும் தாக்குதல் நடந்துள்ளது.
இந்த சம்பவத்தில் 6 கார்கள் உடைக்கப்பட்டு உள்ளன. 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதுபற்றி பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் செய்தியாளர்களை சந்தித்து பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, சேலம் வாழப்பாடியில் எங்களை இடைமறித்து வாகனங்களை தாக்கினர்.
- 4 Nov 2025 1:41 PM IST
தமிழ்நாட்டில் இன்று முதல் மீண்டும் கனமழை
தமிழ்நாட்டில் இன்று முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மயிலாடுதுறை, கடலூர் மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், மயிலாடுதுறை, அரியலூர், திருச்சி, திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களில் நாளை (நவ.05) கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 4 Nov 2025 1:37 PM IST
’என்னை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது’ - பாமக எம்.எல்.ஏ. அருள் பரபரப்பு புகார்
சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுகே வடுகம்பட்டி பகுதியில் பாமக எம்.எல்.ஏ., அருள் சென்ற கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சுமார் 50க்கும் மேற்பட்ட கும்பல், இந்த தாக்குதலில் ஈடுபட்டது. பாமகவில் அன்புமணிக்கும், ராமதாசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது. அருளின் கார் தாக்கப்பட்டு, கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து பாமக எம்.எல்.ஏ. அருள் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்
- 4 Nov 2025 1:34 PM IST
மீண்டும் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆனார் பொன்முடி
திமுக துணைப் பொதுச்செயலாளராக பொன்முடிக்கு மீண்டும் பதவி வழங்கி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து பொன்முடி நீக்கப்பட்டிருந்தார்.
மேலும் அமைச்சர் மு.பெ. சுவாமி நாதனுக்கும் துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 5 துணைப் பொதுச் செயலாளர்கள் உள்ள நிலையில், தற்போது 7 ஆக உயர்த்தப்பட்டுள்ளது



















