இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 30-10-2025


இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 30-10-2025
x
தினத்தந்தி 30 Oct 2025 9:04 AM IST (Updated: 31 Oct 2025 8:55 AM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 30 Oct 2025 9:29 AM IST

    கோவையில் ரேஸ் கார் ஓட்டிய நடிகர் அஜித்குமார்

    நடிகரும், கார் பந்தய வீரருமான அஜித்குமார் கருமத்தம்பட்டியில் உள்ள சர்வதேச கார் பந்தய மைதானத்தை பார்வையிட்டார். பின்னர் பிரபல கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயனை சந்தித்தார். அங்கு அவர்கள் இருவரும் சிறிது நேரம் உரையாடினர். பின்னர் நடிகர் அஜித்குமார் அங்குள்ள கோ கார்ட்டிங் ரேஸ் காரை ஓட்டி பார்த்தார்.

  • 30 Oct 2025 9:24 AM IST

    விவசாயம், விவசாயிகளை பற்றி தெரியாமல் அறிக்கை விடுகிறார் - விஜய் மீது அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கு

    விவசாயத்தையும், விவசாயிகளையும் பற்றி தெரியாத புதிய கட்சி தலைவர்கள், அது குறித்து அறிக்கை விட்டு வருகின்றனர். மேலும் அவர்கள், பச்சை துண்டுகளை கட்டிக்கொண்டு தாங்களும் விவசாயிகள் என கூறுகின்றனர். பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூட்டணியில் சீட்டு பெறுவதற்காக தி.மு.க. அரசை விமர்சனம் செய்து வருகிறார்.

    தற்போது அறிக்கை விடும் த.வெ.க. தலைவர் விஜய், கொரோனா காலத்தில் எங்கிருந்தார். கொரோனா காலத்தில் தி.மு.க.வினர் வீடு வீடாகச் சென்று காய்கறி, மளிகைப் பொருட்கள் வழங்கினர். கஷ்டம் வரும்போது யார் உதவி செய்கிறார்களோ? அவர்களை தான் மக்கள் அடையாளம் காண்பார்கள் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

  • 30 Oct 2025 9:18 AM IST

    இந்தியாவில் அறிமுகமாகிறது டிரைவர் இல்லாத கார்!

    டிரைவர் இல்லாத கார் பெங்களூருவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் உள்ள விப்ரோ, இந்திய அறிவியல் நிறுவனம் ஆகியவற்றுடன் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியை சேர்ந்த 6 மாணவர்கள் அடங்கிய குழுவினர் இந்த டிரைவர் இல்லாத தானியங்கி காரை வடிவமைத்துள்ளனர்.

    இந்த கார் முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தில் தயார் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு முதல் இந்த கார் தயாரித்து பல்வேறு கட்ட சோதனை ஓட்டங்கள் நடைபெற்றது. குறிப்பாக குறுகலான சாலையில் எப்படி இயங்கும்?, சாலைகளின் குறுக்கே நாய்கள், ஆடு, மாடுகள் வந்தால் எப்படி இயங்கும்?, வாகனங்களுக்கு வழிவிடுவது உள்பட பல்வேறு கட்ட சோதனை செய்து, அதற்கு ஏற்ப செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த கார் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

  • 30 Oct 2025 9:16 AM IST

    முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு துணை ஜனாதிபதி மரியாதை

    முத்துராமலிங்கத் தேவரின், 118-வது ஜெயந்தி மற்றும் 63-ம் ஆண்டு குருபூஜையையொட்டி பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் மரியாதை செலுத்தினார். அப்போது பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

  • 30 Oct 2025 9:12 AM IST

    பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் 6 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

    பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் அந்நாட்டு ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளனர். மேலும் ராணுவ வாகனம் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடும் நடத்தியுள்ளனர். இந்த குண்டுவெடிப்பில் 6 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

  • 30 Oct 2025 9:10 AM IST

    லேசர் கதிர்வீச்சு மூலம் மழைப்பொழிவு சாத்தியமா? அபுதாபி தொழில்நுட்ப மைய ஆராய்ச்சியாளர்கள் விளக்கம்

    அபுதாபி தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மையத்தின் (டி.ஐ.ஐ) ஆராய்ச்சியாளர்கள் அமீரக மழை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடத்திய ஆராய்ச்சியில் லேசர் கதிர்வீச்சு தொழில்நுட்பத்தில் மழைப்பொழிவுக்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    சாதாரணமாக மழைப்பொழிவு என்பது தண்ணீர் ஆவியாகி மேகக்கூட்டம் உருவாகி அது குளிரும் போது பெய்வது ஆகும். இதில் செயற்கையாக கிளவுட் சீடிங் முறையில் சில ரசாயனங்களை பயன்படுத்தி மேகத்தை குளிர்வித்து மழைப்பொழிவை உண்டாக்கலாம். உலகில் அமீரகம், இந்தியா உள்பட நாடுகள் வெற்றிகரமாக இதனை செய்து வருகின்றன. பொதுவாக மழைப்பொழிவு குறைவாக உள்ள பகுதிகளில் இதுபோன்ற மாற்று தொழில்நுட்ப வழிகள் மூலம் மழை பெறப்படுகிறது. இதன் அடுத்தகட்ட நகர்வாக லேசர் கதிர்வீச்சு மூலம் மழைய தூண்ட முடியும் என கண்டறியப்பட்டுள்ளது.

  • 30 Oct 2025 9:08 AM IST

    சீன அதிபர் ஜின்பிங்குடன் - அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு

    சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். தென்கொரியாவின் புசான் நகரில் இந்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பரஸ்பர வரி விதிப்பு, அரிய வகை கனிம ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதில் சீனா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் சீனா மீதான வரி விதிப்புகளை தளர்த்துமாறு ஜின்பிங், டிரம்பிடம் வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பேச்சுவார்த்தை மூலம் உலக பொருளாதார சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும் என கூறப்படுகிறது.

  • 30 Oct 2025 9:06 AM IST

    நவம்பர், டிசம்பர் மாதங்களில் வலுவான புயல் உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வாளர் தகவல்

    வடகிழக்கு பருவமழை தொடங்கி மழை பெய்து வருகிறது. பொதுவாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் புயல் போன்ற நிகழ்வுகளால் மழைக்கான வாய்ப்பு அதிக அளவில் இருக்கும். ஆனால் நடப்பாண்டில் பருவமழை தொடங்கிய சில நாட்களிலேயே 'மோந்தா' புயல் உருவாகி, ஆந்திரா நோக்கி சென்றது. தமிழகத்தில் வட மாவட்டங்களில் ஓரளவுக்கு மழையை கொடுத்தது. தற்போது பருவமழை சற்று இடைவெளி விட்டிருக்கிறது.

    இதனைத்தொடர்ந்து அடுத்த மாதம் (நவம்பர்) 10-ந் தேதியில் இருந்து மீண்டும் பருவக்காற்று திரும்பி, 15-ந் தேதிக்கு பிறகு மழை தீவிரம் எடுக்கவுள்ளது. வருகிற நவம்பர், டிசம்பர் மாதங்களில் வலுவான புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்திருக்கிறார்.

1 More update

Next Story