செப்.8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் - சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் அறிவிப்பு

அரசியல் பரபரப்புக்கு இடையே தமிழ்நாடு சட்டசபையில் த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
செப்.8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் - சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் அறிவிப்பு

தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்

முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. சட்டசபையில் பட்ஜெட் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. 2026-2027-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்ய உள்ளார்.

பலத்த பாதுகாப்பு

பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், இன்று சட்டப்பேரவையில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அதனை முன்னிட்டு தலைமைச் செயலகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பட்ஜெட் தாக்கல் - எதிர்க்கட்சி தலைவர் வருகை

2026-27 நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட் சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவைக்கு வருகை தந்துள்ளார்.

பட்ஜெட் தாக்கல் - தமிழக முதல்-அமைச்சர் விஜய் வருகை

தனது தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் தமிழக முதல்-அமைச்சர் விஜய் சட்டசபைக்கு வருகை தந்துள்ளார்.

பட்ஜெட் தாக்கல் - அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகை

2026-27 நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட் சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவைக்கு வருகை தந்துள்ளார்.

முண்டகக்கண்ணி அம்மன் கோவிலில் அமைச்சர் என்.ஆனந்த்

தவெக அரசின் முதல் பட்ஜெட் சற்று நேரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், சென்னையில் உள்ள முண்டகக்கண்ணி அம்மன் கோவிலில் அமைச்சர் என்.ஆனந்த் உள்ளிட்டோர் சாமி தரிசனம் செய்தார்.

2026-27 நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை முன்னிட்டு, தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன், தமிழக முதல்-அமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது

சபாநாயகர் குறிப்பிட்ட திருக்குறள்!

குறள்:

வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை ஆராய்வான் செய்க வினை

விளக்கம்:

வருவாய் வரும் வழிகளைப் பெருக்கி, வந்த செல்வத்தை வளர்த்து, அதற்குக் வரக்கூடிய இடையூறுகளை ஆராய்ந்து நீக்க வல்லவனிடம் ஒரு செயலைச் செய்யச் கொடுக்க வேண்டும்.

2026-27 நிதி ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் தாக்கலையொட்டி சட்டசபை கூட்டம் தொடங்கியது

2026-27-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார்.

சூழ்ச்சிகளை எதிர்த்து வெற்றி கொண்ட ஜனநாயகன் - மரிய வில்சன்

பல்வேறு சூழ்ச்சிகளை வெற்றி கண்டு ஜனநாயகனாக இந்த அவையில் அமர்ந்திருக்கிறார் முதல்-அமைச்சர். அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியே அரசின் லட்சியம்.3 மாதங்களில் ஏராளமான சாதனைகளை செய்துள்ளது விஜய் அரசு.

எல்லாம் கொடுத்த மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்த மட்டுமே அரசியலுக்கு வந்தவர் முதல்-அமைச்சர் விஜய். சமூகநீதி, சமத்துவம், வறுமை ஒழிப்பு பெண்கள் பாதுகாப்பு ஆகிய கோட்பாடுகளும் ஆட்சி நடக்கிறது என்றார்.

வறுமை இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க, 2026ம் ஆண்டுக்குள் 1.5 ட்ரில்லியன் டாலர் பொளாதாரம் உள்ள மாநிலமாக மாற்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது" - நிதியமைச்சர் மரிய வில்சன்

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்

தமிழக அரசின் 2026-27-ம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, ஆட்சிப் பொறுப்பில் இருந்த தி.மு.க. அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் வருவாய் வரவுகள் சுமார் ரூ.3 லட்சத்து 44 ஆயிரத்து 575 கோடி என்றும், நிதிப் பற்றாக்குறை சுமார் ரூ.1 லட்சத்து 21 ஆயிரம் கோடி என்றும், வருவாய் பற்றாக்குறை ரூ.48 ஆயிரத்து 696 கோடியே 32 லட்சம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 2026-2027-ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார்.

பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு ரூ.560 கோடி நிதி ஒதுக்கீடு.

மாநிலத்தின் வருவாயை அதிகரிக்க வருவாய் மேம்பாட்டுக் குழு

மதுபான உற்பத்தி ஆலைகளுக்கான சிறப்புக் கட்டணம் மூலம் அரசுக்கு கூடுதலாக ரூ.1,000 கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசின் பல்வேறு நடவடிக்கை மூலம் அரசுக்கு ரூ.15,000 கோடி கூடுதலாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலத்தின் வருவாயை அதிகரிக்க வருவாய் மேம்பாட்டுக் குழுவை விரைவில் அரசு அமைக்கவுள்ளது - நிதியமைச்சர் மரிய வில்சன்

காமராஜர் சிறப்பு பள்ளிகள் அமைக்க நிதி ஒதுக்கீடு

நவீன உண்டு உறைவிட பள்ளிகள் நிறுவப்படும்

அரசு பள்ளிகளில் சூப்பர் கிளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம் செயல்படுத்தப்படும்.

10 ஆயிரம் பள்ளிகளில் செயல்படுத்தப்பட உள்ள திட்டத்திற்காக ரூ.139 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தினசரி தூய்மை பணிகள், குடிநீர், கழிப்பறை பராமரிப்பு, 24 மணி நேர பாதுகாப்புக்கு திட்டம்

குழந்தைகள் படிக்க பள்ளிகளில் தரமான உட்கட்டமைப்பு வசதிகள் அவசியம் என்பதை உணர்ந்து முடிவு.

3,734 பள்ளிகளில் ரூ.2,132 கோடி செலவில் அரசு பள்ளிகள் நவீனமயமாக்கப்படும்.

போதைப்பொருள் புழக்கம் குறித்த தகவல்களை தெரிவிக்க சிறப்பு செயலி.

தமிழ்நாடு மாணவர் தங்கும் விடுதி மற்றும் உட்கட்டமைப்பு நிறுவனம்

மாநிலம் முழுவதும் மாணவர் தங்கும் வசதிகளை மேம்படுத்திட சிறப்பு நோக்கு நிறுவனம் (Special Purpose Vehicle) அமைக்கப்படும்.

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் அடிப்படையில் நீட் தேர்வு முறையினை உடனடியாக ரத்து செய்து பொதுத்தேர்வின் அடிப்படையில் மருத்துவக் கல்விக்கான சேர்க்கையைத் தொடர்ந்திட மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.

மடிக்கணினி திட்டத்தின் பெயர் மாற்றம்

திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட உலகம் உங்கள் கையில் திட்டத்தின் பெயர், வெற்றி மடிக்கணினி திட்டம் என மாற்றி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு ரூ.2,000 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மதுரையில் புதிய சட்டக்கல்லூரி

மதுரையில் 300 மாணவர்களின் சேர்க்கையுடன் சட்டக்கல்லூரி தொடங்கப்படும்.

5 தொழிற்பயிற்சி நிலையங்கள்

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் செயற்கை நுண்ணறிவு இயந்திர வழி கற்றல் புதிய தொழிற்பிரிவு தொடக்கம். ரூ.90 கோடி மதிப்பீட்டில் 5 புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் நிறுவப்படும். 22,500 மெக்கானிக்குகளுக்கு மின்சார வாகனங்கள் மற்றும் மின்கலம் பராமரிப்பு பயிற்சி அளிக்க ரூ.3 கோடி ஒதுக்கீடு.

10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் உருவாக்கப்படும் - நிதியமைச்சர் மரிய வில்சன்

ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்வதை நோக்கமாகக் கொண்டு, மாநிலம் முழுவதும் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் உருவாக்கப்படும். இதற்காக ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு - நிதியமைச்சர் மரிய வில்சன்

தொழிலாளர் நலனுக்கு ரூ.2,022 கோடி ஒதுக்கீடு

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறைக்கு ரூ2,022 கோடி ஒதுக்கீடு

பள்ளி நிறைவுத் திட்டம்

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் ‘பள்ளி நிறைவுத் திட்டம்' அறிவிக்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் 3,734 அரசுப் பள்ளிகள் ரூ.2,132 கோடி மதிப்பில் நவீனமயமாக்கப்பட உள்ளன.

மேலும் 2,514 தொடக்கப் பள்ளிகள் மேம்படுத்தப்படவுள்ளன. 855 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் இத்திட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. நடப்பாண்டிற்கு இத்திட்டத்திற்காக ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

பள்ளி நேரத்திற்கு பிறகு தினமும் ஒரு மணி நேரம் விளையாட்டு

பள்ளி நேரத்திற்கு பிறகு தினமும் ஒரு மணி நேரம் முறைப்படுத்தப்பட்டு விளையாட்டுப் பயிற்சி வழங்கப்படும்.

விளையாட்டு வீரர்களுக்கு நிதி உதவி வழங்க கூடுதலாக ரூ.22 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தி

மாணவர்களுக்கு சைக்கிள் - ரூ.277 கோடி ஒதுக்கீடு

“அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் +1 படிக்கும் மாணவர்களுக்கு ரூ.277 கோடியில் ஹெல்மெட், வாட்டர் பாட்டில் வசதிகளுடன் நவீன BRANDED சைக்கிள் வழங்கப்படும்”

அண்ணன் சீர் திட்டம் - ரூ.812 கோடி ஒதுக்கீடு

பெண்களுக்கு திருமணத்தின் போது அரசு சார்பில் 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை வழங்கும் 'அண்ணன் சீர்' திட்டத்துக்கு ரூ.812 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு. அனைத்து பெண்களுக்கும் பொருந்துமா? அல்லது யாருக்கெல்லாம் பொருந்தும்? எனக் குறிப்பிடப்படவில்லை.

கருவுற்ற பெண்களுக்கான சேவை மற்றும் உதவி மையம்

கருவுற்ற பெண்களுக்கான சேவை மற்றும் உதவி மையங்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்படும்

மகப்பேறு நாள் நெருங்கும் வேளையில் தங்கியிருந்து பயன் பெறலாம்; கட்டணமில்லாமல் உணவு மற்றும் மருத்துவ உதவிகள், தொடர் மருத்துவக் கண்காணிப்பு உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும்; ரூ.23 கோடி நிதி ஒதுக்கீடு -நிதி அமைச்சர் மரிய வில்சன்

12 மாவட்டங்களில் 12 முதியோர் இல்லங்கள் நிறுவப்படும்

12 மாவட்டங்களில் 12 முதியோர் இல்லங்கள் நிறுவப்படும். இதற்காக ரூ.6.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

5 லட்சம் இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி

2031-ஆம் ஆண்டிற்குள் பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் 5 லட்சம் இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்கப்படும் - நிதியமைச்சர் மரிய வில்சன்

அரசு நூலகங்களை டிஜிட்டல் நூலகங்களாக மறுவடிவமைக்க 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கிராமிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும்

தமிழரின் பாரம்பரிய விளையாட்டுகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்ல தமிழ்நாடு கிராமிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும் இதற்காக ரூ.42 கோடி ஒதுக்கீடு - நிதியமைச்சர் மரிய வில்சன்

நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள்

மூத்த குடிமக்களுக்காக தமிழ்நாடு முழுவதும் 1000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும்

கிராமப் பஞ்சாயத்துகளுக்கே நேரில் சென்று இலவச உடல் பரிசோதனை மற்றும் மருந்துகள் வழங்கப்படும். 1 மருத்துவர், 1 செவிலியர், 1 இயன்முறை மருத்துவருடன் இந்தச் சேவை வழங்கப்படும். இதற்காக ரூ.33 கோடி நிதி ஒதுக்கீடு

வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம்- ரூ.110 கோடி ஒதுக்கீடு

கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 100% மானியத்தில் 5 ஆடுகள் வழங்கப்படும்; ரூ.110 கோடி ஒதுக்கீடு - நிதியமைச்சர் மரிய வில்சன்

மூத்த குடிமக்களுக்காக பொழுதுபோக்கு மையங்கள்

மூத்த குடிமக்களுக்காக பொழுதுபோக்கு மையங்கள் அமைக்கப்படும். நூலகம், யோகா, தியானம், உள்ளரங்க விளையாட்டு வசதிகளுடன் கூடிய மையங்கள் முதற்கட்டமாக 5 மாவட்டங்களில் நிறுவப்படும் - நிதியமைச்சர் மரிய வில்சன்

கறவை மாடுகள் வழங்கும் திட்டம் - ரூ.57 கோடி ஒதுக்கீடு

ஒவ்வொரு ஆண்டும் 10,000 தகுதி வாய்ந்த பெண்களுக்கு கறவை மாடுகள் விலையில்லாமல்

வழங்கப்படும்; ரூ.57 கோடி நிதி ஒதுக்கீடு - நிதியமைச்சர் மரிய வில்சன்

ஆழ்கடல் மீன்பிடித் தொழில் ஊக்குவிப்பு: ரூ. 12 கோடி நிதி ஒதுக்கீடு

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2026-27-ன் கீழ் மீனவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 'ஆழ்கடல் மீன்பிடித் தொழில் ஊக்குவிப்பு' திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நவீன ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் வாங்க விரும்பும் மீனவர்களுக்கு வட்டி மானிய உதவி வழங்கப்படும். பாரம்பரிய மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள ஊக்குவிக்கப்படும்.

புதிய கால்நடை காப்பீட்டுத் திட்டம்

புதிய கால்நடை காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். எதிர்பாராத இழப்புகளில் இருந்து விவசாயிகளுக்கு நிதிப் பாதுகாப்பு வழங்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.31 கோடி நிதி ஒதுக்கீடு - நிதியமைச்சர் மரிய வில்சன்

மீனவர்களுக்கு உதவித்தொகை உயர்வு

மீன் பிடித் தடைக் காலங்களில் மீனவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.7,000 ஆக உயர்த்தப்படும். 1.93 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ரூ.135 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் அனைவருக்கும் ஸ்மார்ட் மீட்டர்

சென்னை மாநகரின் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மீட்டர்கள் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் பிற பகுதிகளில் 50 லட்சம் தொழில் மற்றும் வணிக நுகர்வோருக்கும் விரிவாக்கம் செய்யப்படும்.

வீட்டுக் கூரை சூரிய மின் மானியத் திட்டம் - ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு

*வீட்டுக் கூரை சூரிய மின் மானியத் திட்டம் அறிமுகம் செய்யப்படும்

*சூரிய மின்பலகைக்கு ரூ.1 இலட்சம் வரை மானியம்

* ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

கைத்தறி துறைக்கு ரூ.1,678 கோடி ஒதுக்கீடு

கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை - ரூ.1,678 கோடி ஒதுக்கீடு. திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி சென்டர் - ரூ.10 கோடி ஒதுக்கீடு. தமிழ்நாடு ஆடை வடிவமைப்பு நிறுவனம் - ரூ.60 கோடி ஒதுக்கீடு - நிதி அமைச்சர் மரிய வில்சன்

விண்வெளித் தொழில் முதலீட்டு மண்டலம்: தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் புதிய திட்டம்

தமிழ்நாட்டில் விண்வெளித் துறையை ஊக்குவிக்கவும், தொழில் வளர்ச்சியைப் பெருக்கவும் "விண்வெளித் தொழில் முதலீட்டு மண்டலம்" அமைக்கப்படும்.

தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இந்த விண்வெளித் தொழில் முதலீட்டு மண்டலம் அமைக்கப்படுகிறது.

இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அனுமதி மையமான (IN-SPACE) இணைந்து விண்கலப் பொதுத் தொழில்நுட்ப வசதி உருவாக்கப்படுகிறது.

விண்வெளி ஏவுதளத்தின் புவியியல் முக்கியத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த முதலீட்டு மண்டலம் வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்படவுள்ளது - நிதி அமைச்சர் மரிய வில்சன்

இந்தியாவின் முதல் ஏஐ நகரம் - சாத்தியக்கூறு ஆய்விற்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு

இந்தியாவின் முதல் பிரத்யேக செயற்கை நுண்ணறிவு (AI) நகரமாக 'அறிவகம்'

AI பல்கலைக்கழகம், சர்வதேச திறன் மேம்பாட்டு மையம் & குறைகடத்தி சோதனை ஆய்வகம்

AI, குவாண்டம் தொழில்நுட்பம் & ஆராய்ச்சிக்கான ஒருங்கிணைந்த மையம்

சாத்தியக்கூறு ஆய்விற்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு - நிதி அமைச்சர் மரிய வில்சன்

திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி சென்டர்

சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை ஆடை உற்பத்திக்கு ஊக்குவிக்க பல கட்டங்களில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்

> ‘திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி சென்டர்' அமைக்கப்படும் இதற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு -நிதி அமைச்சர் மரிய வில்சன்

அங்கன்வாடி மேம்பாடு: குழந்தைகளின் எதிர்காலத்தை வளமாக்கும் புதிய திட்டங்கள்

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2026-27 இன் கீழ், குழந்தைகளின் நலன் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் அங்கன்வாடி மையங்களை மேம்படுத்தும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது/

சிதலமடைந்த 500 அங்கன்வாடி மையங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்படவுள்ளன.

அங்கன்வாடி மையங்களில் பாதுகாப்பான குடிநீர், கழிப்பறை மற்றும் மின்சார வசதிகள் உறுதி செய்யப்படுகின்றன.

குழந்தைகளின் பாதுகாப்பும் ஆரோக்கியமும் முழுமையாக உறுதி செய்யப்படும் வகையில் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது - -நிதி அமைச்சர் மரிய வில்சன்

அனைவருக்கும் தரமான வீடு

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2026-27 இன் கீழ், பொதுமக்களுக்கு பாதுகாப்பான மற்றும் தரமான தங்குமிடங்களை வழங்கும் நோக்கில் "அனைவருக்கும் தரமான வீடு" திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக ரூ.1,253 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாண்டில் 24,313 அடுக்குமாடிக் குடியிருப்புகள் முழுமையாகக் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வரவுள்ளன பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினரின் நலனுக்காக 14,194 புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டும் பணிகள் தொடங்கப்பட உள்ளன. அனைத்துக் குடியிருப்புகளும் அவசியமான அடிப்படை வசதிகளுடன் தரமான முறையில் அமைக்கப்படுகின்றன -நிதி அமைச்சர் மரிய வில்சன்

சென்னை கூவம் நதியில் படகு சவாரி

கூவம் மற்றும் அடையாறு ஆறுகளில் பொதுமக்கள் படகு சவாரி செய்வதையும், குழந்தைகள் ஆனந்தக் குளியல் போடுவதையும் அரசு உறுதி செய்யும். சியோல் நகரத்தின் சென்சியான் நதி, சிங்கப்பூரின் தலாங் நதி போல சென்னையின் அடையாளமாக கூவம் மாற்றப்படும் - நிதி அமைச்சர் மரிய வில்சன்

விரைவில் பூந்தமல்லி - போரூர் - வடபழனி மெட்ரோ ரெயில் சேவை

பூந்தமல்லி பைபாஸ்-போரூர்-வடபழனி மெட்ரோ ரெயில் சேவை விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்படும் - நிதி அமைச்சர் மரிய வில்சன்

1,000 புதிய ஏசி மின்சாரப் பேருந்துகள் வாங்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னைக்கு 1,000 புதிய ஏசி மின்சாரப் பேருந்துகள் மற்றும் பணிமனை கட்டமைப்பு பணிகளுக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு நிதி அமைச்சர் மரிய வில்சன்

பனை மேம்பாட்டுக் கழகம் நிறுவப்படும்

பனை விவசாயிகளின் வாழ்வாதார பாதுகாப்பையும், வருவாயையும் உறுதி செய்யும் வகையில் ரூ.16 கோடி நிதியுடன் தமிழ்நாடு பனை மேம்பாட்டுக் கழகம் நிறுவப்படும் - நிதி அமைச்சர் மரிய வில்சன்

வீட்டு அலகுத் தொகை உயர்வு

புதிய மாநில வீட்டுவசதித் திட்டமான வெற்றி வீடு திட்டம் அறிமுகம்; வீட்டு அலகுத் தொகை ரூ.3.10 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்வு; ரூ.3,500 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும் - நிதி அமைச்சர் மரிய வில்சன்

போதைப்பொருள் இல்லா தமிழ்நாட்டை உருவாக்குவது நமது இலக்கு

SAY NO TO DRUGS சொன்னவர், என்றென்றும் அதைச் சொல்பவர் முதல்-அமைச்சர் விஜய்

போதைப்பொருள் இல்லா தமிழ்நாட்டை உருவாக்குவது நமது இலக்கு. பள்ளிகளில் போதைப்பொருள் எதிர்ப்பு அமைப்புகளும், தன்னார்வ குழுக்களும் அமைக்கப்படும். இது குறித்த விழிப்புணர்வுக்காக 10581 என்ற உதவி எண் பள்ளி வளாகங்களில் தெளிவாக காட்சிப்படுத்தப்படும். இத்திட்டத்தை செயல்படுத்த 7 கோடி ரூபாய் ஒதுக்கீடு - நிதி அமைச்சர் மரிய வில்சன்

3 புதிய மெட்ரோ வழித்தடங்கள் அமைக்க பரிந்துரை

3 புதிய மெட்ரோ வழித்தடங்கள் அமைக்க மத்திய அரசிடம் மாநில அரசு பரிந்துரைத்துள்ளது.

விமான நிலையம்-கிளாம்பாக்கம், கோயம்பேடு-பட்டாபிராம், பூந்தமல்லி-சுங்குவார்சத்திரம் இடையே மெட்ரோ - நிதி அமைச்சர் மரிய வில்சன்

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையை மேம்படுத்த ரூ.354 கோடி ஒதுக்கீடு

காவல்துறையினருக்கு புதிய குடியிருப்பு வளாகங்கள்

காவல்துறையினருக்கு புதிய குடியிருப்பு வளாகங்கள் அமைக்கப்படும். 5000 காவலர் குடும்பங்கள் இதனால் பயன்பெறுவர். இதற்காக ரூ.431 கோடி நிதி ஒதுக்கீடு - நிதி அமைச்சர் மரிய வில்சன்

புதிய சாலை பாதுகாப்பு கொள்கை

நிறுவன அமைப்புகள், சாலை வடிவமைப்பு மற்றும் பொறியியல், போக்குவரத்து சட்ட அமலாக்கம், அவசரகால ஆசிகிச்சை மற்றும் விழிப்புணர்வுக் கல்வி ஆகிய 5 முக்கியத் தூண்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்படும்.

* முதலமைச்சர் விபத்து நிவாரண நிதிக்கு ரூ.200 கோடி

* சாலைப் பாதுகாப்புப் பணிகளுக்கு ரூ.130 கோடி

மொத்தம் ரூ.330 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது - நிதி அமைச்சர் மரிய வில்சன்

காயிதே மில்லத் விருது

திருவள்ளுவர் திருநாளன்று ஆண்டுதோறும் 'காயிதே மில்லத்’ விருது வழங்கப்படும். காயிதே மில்லத் அவர்களின் வரலாற்றுப் பெருமைக்கு சிறப்பு மரியாதை. தமிழ்மொழி மீதான அவரின் ஆழ்ந்த பற்றை போற்றும் அரசு இதுவாகும் - - நிதி அமைச்சர் மரிய வில்சன்

வெற்றி 150’ திட்டத்துக்கு ஆண்டுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு

VB-G RAM G திட்டத்தின் துணை திட்டமாக 'வெற்றி 150' திட்டத்துக்கு ஆண்டுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு -

125 நாட்கள் பணி செய்யும் குடும்பங்களுக்கு கூடுதலாக 25 நாட்கள் பணி வழங்க ஏற்பாடு செய்யப்படும் - நிதி அமைச்சர் மரிய வில்சன்

தரமான கோதுமை மாவு விநியோகம்

பொட்டலமிடப்பட்ட கோதுமை மாவு வழங்கும் முன்னோடி திட்டம் செயல்படுத்தப்படும். தரமான மற்றும் அளவான அத்தியவசியம் பொருட்கள் விநியோகம் செய்யப்படும். படிப்படியாக மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும். இதற்காக ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது - நிதி அமைச்சர் மரிய வில்சன்

அமலில் உள்ள பொதுநலத் திட்டங்கள் தொடரத் திட்டம்

கடந்த 30 ஆண்டுகளாக அமலில் உள்ள பொதுநலத் திட்டங்களில் பெரும்பாலானவற்றை இந்த அரசு தொடர்ந்து செயல்படுத்துவதுடன்,அவற்றை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது - நிதி அமைச்சர் மரிய வில்சன்

மாநில அரசின் மொத்தக்கடன் ரூ.10.98 லட்சம் கோடி

மாநில அரசின் மொத்த கடன் ரூ.10.98 லட்சம் கோடி என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது நிதி அமைச்சர் மரிய வில்சன்.

உள்துறை, மதுவிலக்குத் துறைக்கு நிதி ரூ.17,290 கோடி ஒதுக்கீடு

உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைக்கு ரூ.17,290 கோடி ஒதுக்கீடு - நிதி அமைச்சர் மரிய வில்சன்

இரண்டரை மணி நேரம் உரையாற்றிய நிதி அமைச்சர் மரிய வில்சன்

நிதிநிலை அறிக்கையை தாக்கல்செய்த நிதியமைச்சர் மரிய வில்சன் இரண்டரை மணி நேரம் உரையாற்றினார்

காலை 10.01 மணிக்கு பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கிய மரிய வில்சன் 12.31க்கு உரையை நிறைவு செய்தார்.

20,000 பொது இ.வி சார்ஜிங் நிலையங்கள்

5 ஆண்டுகளில் 20,000 பொது EV சார்ஜிங் நிலையங்கள் உருவாக்கப்படும். இதற்காக ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு

குடியிருப்புகளில் EV சார்ஜிங் நிலையங்களுக்கு அரசு மானியம் வழங்கப்படும். இதற்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு - நிதி அமைச்சர் மரிய வில்சன்

மூத்த குடிமக்களுக்கு புனிதப் பயணம் திட்டத்திற்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு

மூத்த குடிமக்களுக்கு புனிதப் பயணம் திட்டத்திற்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது - நிதி அமைச்சர் மரிய வில்சன்

நாட்டுப்புறக் கலைஞர்கள் வாழ்வாதாரப் பாதுகாப்புத் திட்டம்

200 சிறந்த கலைக் குழுக்களுக்கு ஆண்டுதோறும் 100 நாட்கள் நிகழ்ச்சி வாய்ப்பு

நாட்டுப்புறக் கலைகளும் கலைஞர்களின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும் - ரூ.23 கோடி நிதி ஒதுக்கீடு - நிதி அமைச்சர் மரிய வில்சன்

மின் பகிர்மான கட்டமைப்பு மேம்பாடு

கோயம்புத்தூர் - அரியலூர் 765 கே.வி. மின் பகிர்மானப் பாதை: ரூ. 4,000 கோடியில் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் - அரியலூர் 765 கே.வி. மின் பகிர்மானப் பாதைத் திட்டம் ரூ.4,000 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

எதிர்கால மின் தேவைக்கேற்ப மாநிலத்தின் பகிர்மான கட்டமைப்பை வலுப்படுத்தும் முக்கிய திட்டம் அமல்படுத்தப்படும் - நிதி அமைச்சர் மரிய வில்சன்

நதிகள் மீட்புக்கு ரூ.25 கோடி

* காவிரி, வைகை & தாமிரபரணி நதிகள் மறுசீரமைப்பு

*மாசுபாட்டைத் தடுக்க விரிவான திட்டம்

* கழிவுநீர் சுத்திகரிப்பு & திடக்கழிவு மேலாண்மை

நதிச் சுற்றுலா ரூ.53 கோடி நிதி ஒதுக்கீடு

காவிரி, வைகை & தாமிரபரணி நதிகளில் நதிச் சுற்றுலா

* சுற்றுலா வளர்ச்சி மற்றும் உள்ளூர் வேலைவாய்ப்புக்கு ஊக்கம்

* ஓகேனக்கல் திருவரங்கம், மதுரை & பாபநாசம்-திருநெல்வேலி வழித்தடங்கள்

* நதிக்கரை மேம்பாடு & நதி மேற்பரப்பு சுத்தம் சாத்தியக்கூறு ஆய்விற்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு - நிதி அமைச்சர் மரிய வில்சன்

எல்-நினோ ஆபத்து - ரூ.340 கோடி ஒதுக்கீடு'

சூப்பர் எல்-நினோ பாதிப்பை சமாளிக்க சிறப்பு நடவடிக்கைகளாக குடிநீர் வழங்கல் & நீர் ஆதாரங்களை பலப்படுத்துதல், கால்நடைகளுக்கான தீவன சேமிப்பு போன்றவற்றுக்கு மாநிலப் பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து ரூ.340 கோடி ஒதுக்கீடு - நிதி அமைச்சர் மரிய வில்சன்

திருக்கோவில் திருப்பணிகள்

5 ஆண்டுகளில் 3,000 திருக்கோவில்களுக்கு திருப்பணி மற்றும் திருக்குடமுழுக்கு

250 திருக்குளங்கள் & 75 மரத் தேர்கள் சீரமைப்பு

பக்தர்களுக்கு குடிநீர், கழிவறை, தங்குமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்பாடு

1,000 ஆண்டுகள் பழமையான 213 திருக்கோயில்கள் புனரமைப்பு - நிதி அமைச்சர் மரிய வில்சன்

நிலைமை சரி செய்ய 2 ஆண்டுகள் தேவைப்படும் - அமைச்சர் மரிய வில்சன்

நேர்மையான, திறமையான, நல்லாட்சி வழங்க உள்ளோம். நிலைமை சரி செய்ய குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் தேவைபடும். ரூ.15,000 கோடி கூடுதல் வருவாயை அரசால் திரட்ட முடியும் என சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் மரிய வில்சன் கூறினார்

2026-27ம் ஆண்டில் 1.73 லட்சம் கோடி கடன் பெற தவெக அரசு திட்டம்

2026-27ம் ஆண்டில் 1.73 லட்சம் கோடி கடன் பெற திட்டம் என தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்.8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர்

தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்தபின் சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

2026-27 நிதிநிலை அறிக்கை மிக அமைதியாக நடந்தது. ஒத்துழைப்பு தந்த உறுப்பினர்களுக்கு நன்றி.

நாளை வேளாண் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். செப் 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்த அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 7-ல் இரங்கற் குறிப்புகள், இரங்கல் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு பொது விவாதம் தொடங்கும். ஆகஸ்ட் 10,11-ல் நிதிநிலை அறிக்கை, வேளாண் அறிக்கை மீது பொது விவாதம் நடத்தப்படும். ஆகஸ்ட் 12- தேதி பொது விவாதத்துக்கு பதிலுரை அளிக்கப்படும். ஆகஸ்ட் 13-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை பேரவை விடுமுறை. ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் மானிய கோரிக்கை, சட்டமன்றம் காலை 9.30 மணிக்கு தொடங்கும். தேவைப்பட்டால் மாலை 6 மணி வரை சட்டசபை கூட்டம் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com