

சென்னை,
சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் விஜய்யை பாமக தலைவர் அன்புமணி இன்று காலை சந்தித்துப் பேசினார். அப்போது சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியாகி இருந்தது. மேலும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை விஜய்யிடம் அன்புமணி அளித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில், தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் விஜயை சந்தித்தித்த பின் பாமக தலைவர் அன்புமணி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
சாதிவாரி கணக்கெடுப்பை தமிழ்நாடு அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இதற்கான அறிவிப்பை வரும் 18ஆம் தேதி சட்டப்பேரவையில் நிகழ்த்தப்படவிருக்கும் கவர்னர் உரையில் வெளியிடுவதுடன், அதற்கான அரசாணையையும் உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம்.
தவெக அரசு ஆட்சி பொறுப்பேற்று நாளையுடன் ஒரு மாதம் நிறைவடைகிறது. ஒரு மாத தவெக ஆட்சி நன்றாகவே உள்ளது. நிறைய மாற்றங்கள் வந்துள்ளன; ஊழல் பெரியளவில் குறைந்துள்ளது. இன்னும் 2, 3 மாதங்கள் ஆகும். நாம் நேரம் கொடுக்க வேண்டும். பெரிய அளவில் நிறைய இடங்களில் ஊழல் குறைந்து இருக்கிறது.
கடந்த 5 ஆண்டு திமுக ஆட்சியில் ஒரு புதிய மின்திட்டங்களும் கொண்டு வரவில்லை. தற்போதைய மின்வெட்டுக்கு திமுகவே காரணம். மேகதாது தமிழகத்தின் உயிர்நாடி. இந்த பிரச்சினை தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுமாறு முதல்-அமைச்சரிடம் தெரிவித்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.