அதிமுக அலுவலகத்திற்கு எங்களால் பாதிப்பு ஏற்படாது - சி.வி.சண்முகம் பேட்டி

உண்மையான தொண்டர்கள் என்று நிரூபித்த பிறகே அதிமுக அலுவலகம் செல்வோம் என சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.
அதிமுக அலுவலகத்திற்கு எங்களால் பாதிப்பு ஏற்படாது - சி.வி.சண்முகம் பேட்டி
Published on

சென்னை,

அதிமுகவில் இரு பிரிவினராக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு அணியும், முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி. சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மற்றொரு அணியும் பிரிந்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, சட்டப்பேரவையில் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்ததாக சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி. சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோரைக் கட்சிப் பொறுப்புகளிலிருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்தார்.

இதனிடையே, அதிமுகவில் இரு தரப்பினரிடையே நிலவிவரும் அரசியல் விவாதங்களால் பொதுமக்களின் அன்றாடப் போக்குவரத்தில் எந்தப் பாதிப்பும் ஏற்படக் கூடாது என முன்னெச்சரிக்கையாக கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை எம்.ஆர்.சி. நகரில் சி.வி. சண்முகம் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது;-

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு நாங்கள் வரவிருப்பதால் காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. கட்சி அலுவலகத்துக்கு செல்லவில்லை.

இந்த ரத்தம் அதிமுகவின் ரத்தம். சாதாரண எங்களை சட்டப்பேரவை உறுப்பினர்களாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் அமைச்சர்களாவும் பதவிகளைக் கொடுத்து, அழகுபார்த்த இயக்கம் அதிமுக. எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் கட்டிக்காத்தது இந்த இயக்கம். இந்த இயக்கத்தின் தலைமை அலுவலகத்தை நாங்கள் எங்களின் கோவிலாக மதிக்கிறோம்.

எந்த சூழ்நிலையிலும் எந்தக் காரணத்துக்காகவும் எங்கள் கோவிலான தலைமை அலுவலகத்தின் மீது தூசி படுவதற்கோ, எங்களால் சிறிதளவும் பாதிப்பு ஏற்படுவதற்கோ நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

எந்த சூழ்நிலையிலும் எந்தக் காரணத்துக்காகவும் நாங்கள் அங்கே வர மாட்டோம். நாங்கள் அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் என்பதை சட்டப்படி நிரூபித்த பிறகுதான், அங்கே எங்களின் கால் பதியும். ஆகையால், யாரும் அச்சப்பட வேண்டியதில்லை. எந்த சூழ்நிலையிலும் அதிமுக அலுவலகத்திற்கு பாதிப்பு ஏற்படுத்த விட மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com