சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பாரா முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்?

தமிழக சட்டசபையில் இன்று காலை 9.30 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது.
சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பாரா முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்?
Published on

சென்னை,

தமிழகத்தில் நடந்து முடிந்த 17 வது சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆளுங்கட்சியான தி.மு.க., ஆண்ட கட்சியான அ.தி.மு.க.வை விட அதிக இடங்களில் வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க முற்பட்டது. அக்கட்சியின் தலைவரும், முதல்-அமைச்சர் வேட்பாளருமான ஜோசப் விஜய், கவர்னர் அர்லேக்கரை சந்தித்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க கோரினார். மேலும் 2 வாரத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதாகவும் உறுதியளித்தார்.

ஆனால், இதை கவர்னர் ஏற்றுக்கொள்ளவில்லை. வரும் 13ஆம் (இன்று) தேதிக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற உத்தரவின் அடிப்படையிலேயே ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். அதன்படி, கடந்த 10-ம் தேதி தமிழகத்தின் முதல்-அமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்று கொண்டனர்.

தமிழக சட்டசபையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பலம் 108 இல் இருந்து 106 ஆக குறைந்திருக்கிறது. அதாவது, திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் ராஜினாமா செய்திருக்கிறார். மேலும், திருப்பத்தூர் தொகுதியில் ஒரு ஓட்டில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது.

எனவே, சட்டசபையில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர்களின் பலம் 106 ஆக குறைந்திருக்கிறது. அதே நேரத்தில், காங்கிரஸ் (5), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (2), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (2), விடுதலை சிறுத்தைகள் கட்சி (2), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2) ஆகிய கட்சிகள் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு கரம் நீட்டி உள்ளன. இதனால் சட்டசபையில் தமிழக வெற்றி கழகத்திற்கான பலம் 119 ஆக அதிகரித்திருக்கிறது.

பெரும்பான்மையை நிரூபிக்க 118 இடங்கள் போதும் என்ற நிலையில், தமிழக சட்டசபையில் இன்று காலை 9.30 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது. இதில், ஆளும் கட்சியான தமிழக வெற்றி கழகம் பெரும்பான்மையை நிரூபித்தாக வேண்டும். அக்கட்சியின் தலைவரும், முதல்-அமைச்சருமான ஜோசப் விஜய் இந்த அக்னி பரிட்சையை எவ்வாறு எதிர்கொண்டு வெற்றி பெறப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தமிழக சட்டசபையில் இன்று காலை 9.30 மணிக்கு பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான அரசினர் தீர்மானத்தை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் முன்மொழிய இருக்கிறார். அதனைத் தொடர்ந்து சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் வாக்கெடுப்பு நடத்துவார். நம்பிக்கை வாக்கெடுப்பின்போது சட்டசபையின் அனைத்து கதவுகளும் மூடப்படும். மொத்தம் உள்ள 6 வரிசைகளில் பிரிவு வாரியாக வாக்கெடுப்பு நடத்தப்படும்.

வாக்கெடுப்பு நடைபெறும் போது அவையில் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்களோ, அதில் சரி பாதியை விட ஒன்று கூடுதலாக எடுத்தால் வெற்றி பெற்றதாக கணக்கிடப்படும். தற்போதைய நிலையில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு பெரும்பான்மை இருக்கிறது.

இன்றைய கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்கள் 30 பேரும், அம்மா மக்கள் முன்னேற்ற கழக உறுப்பினர் ஒருவரும் பெரும்பான்மையை நிரூபிக்க தமிழக வெற்றிக் கழக அரசுக்கு கூடுதலாக ஆதரவு தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், இன்றைய அக்னி பரிட்சையில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என்று அரசியல் நோக்கங்கள் கருதுகிறார்கள். சட்டசபையில் பெரும்பான்மை நிரூபிக்கபட்டவுடன் இந்த தகவல் கவர்னருக்கு அனுப்பி வைக்கப்படும்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com