திமுக அரசின் ஊழலை சொல்லி நீங்கள் தப்பிக்க முடியாது - எல்.முருகன் அறிக்கை

வாக்குறுதி அளித்தபடி மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்திட தவெக அரசு முனைய வேண்டும் என எல்.முருகன் தெரிவித்தார்.
மத்திய இணை மந்திரி எல்.முருகன்
Published on

சென்னை,

மத்திய இணை மந்திரி எல்.முருகன் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழக அரசின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை தவெக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தின் உண்மையான மொத்த கடனளவு ரூ. 13.18 லட்சம் கோடியாக உள்ளதாகவும், வருவாய் பற்றாக்குறை ரூ. 78, 326 கோடியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருவாய் பற்றாக்குறை முன்பு எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாகவும், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் திமுக அரசு ரூ. 5 லட்சம் கோடி கடன் வைத்துள்ளதாகவும் வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்களை நகர்த்த முடியாது

தமிழக அரசின் நிதி நிலை குறித்த வெள்ளையறிக்கையை வெளியிட்டுள்ள தவெக அரசு,இனிமேல் எப்படி நிதி மேலாண்மை செய்யப்போகிறது என்பதை தமிழக மக்களுக்கு விளக்கம் வேண்டும். முந்தைய அரசின் வரலாற்று ஊழல் காரணமாக அதிருப்தி அடைந்த தமிழக மக்கள், மாற்றத்தை எதிர்பார்த்து தான் தவெக அரசுக்கு வாக்களித்தனர். ஆனால் ஆட்சி பொறுப்பேற்று ஒரு மாத காலத்திற்கு பின்னரும் முந்தைய அரசு மீது புகார் கூறியே தவெக அரசு நாட்களை நகர்த்த முடியாது.

என்ன சொல்ல வருகிறது?

இந்த வெள்ளையறிக்கை மூலம் தவெக அரசு என்ன சொல்ல வருகிறது? தேர்தல் பிரசாரத்தின் போது அள்ளிக் வீசிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்று மறைமுகமாக தவெக அரசு சொல்கிறதா?

கடந்த திமுக ஆட்சியில் நடந்த அவலங்களை, ஊழல், தவறான நிதி மேலாண்மை போன்ற காரணங்களை காட்டிவிட்டு நீங்கள் சும்மா இருக்க முடியாது. முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அவர்களிடம் தமிழக மக்கள் எதிர்பார்ப்பது, அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை தான். முந்தைய அரசின் அவலங்களை கூறி அவர் தப்பித்து கொள்ள முடியாது.

திட்ட அறிக்கை

கொடுத்த வாக்குறுதியை எப்படி நிறைவேற்ற போகிறோம்? தமிழக அரசின் நிதி மேலாண்மை திட்டம் என்ன? என்பதை விளக்கும் செயல் திட்ட அறிக்கையையும் வெளியிட வேண்டும்.

திமுக அரசு ஏற்படுத்திய நிதிச்சுமையை சுட்டிக்காட்டுவதை தாண்டி, அதனை சரி செய்வதற்கு இருக்கும் வழிகள் என்ன? நிதி நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கு இருக்கும் திட்டம் என்ன? என்பதையெல்லாம் தமிழக மக்களுக்கு தெரிய படுத்த வேண்டிய கடமை தவெக அரசுக்கு இருக்கிறது.

திமுகவின் தவறுகளுக்குள் ஒளிந்து கொள்ள தவெக அரசு முயலக்கூடாது. வாக்குறுதி அளித்தபடி மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்திட தவெக அரசு முனைய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com