அமெரிக்காவில் டிரம்புக்கு எதிராக போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

அமெரிக்காவின் 50 மாகாணங்களிலும் 2,500-க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
வாஷிங்டன்,
அமெரிக்க அதிபர் டிரம்பின் குடியேற்றம், பாதுகாப்பு மற்றும் கல்வி தொடர்பான கொள்கைகளை எதிர்த்து போராட்டம் வெடித்தது. அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடந்த போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரியில் பதவியேற்றார். அப்போது அரசின் பொருளாதார கொள்கைகளை மாற்றினார். அதன் அடிப்படையில் அமெரிக்க அரசின் செலவுகளை குறைக்கும் நடவடிக்கையில் இறங்கினார். அடுத்ததாக அமெரிக்க தயாரிப்புகளுக்கு வெளிநாடுகள் விதிக்கும் அதே அளவு வரியை அந்தந்த நாடுகளுக்கும் விதித்தார்.
அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். அவர் பதவியேற்றது முதலே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குடியேற்ற கொள்கை, வரி விதிப்பு என அவர் எடுக்கும் நடவடிக்கைகள் சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அமெரிக்க அரசின் செலவுகளை கட்டுப்படுத்தும் விதமாக உள்நாட்டிலும் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். அடுத்து, பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கையை எடுத்தார்.
டிரம்பின் இந்த நடவடிக்கையால் அமெரிக்காவிலும் விலை வாசி உயர்ந்தது. டிரம்பின் இந்த அதிரடி நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவில் போராட்டம் வெடித்துள்ளது. “இங்கு யாரும் மன்னர் இல்லை” என்ற வலியுறுத்தலுடன் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அமெரிக்காவின் 50 மாகாணங்களிலும் 2,500-க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள டிரம்ப், “இந்த போராட்டங்கள் அர்த்தமற்றது. அவர்கள் தன்னை ஒரு மன்னர் என குறிப்பிடுகிறார்கள். நான் மன்னர் இல்லை. அமெரிக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன். அமெரிக்க நலன்களை உறுதி செய்யவே இந்த நடவடிக்கைகளை எடுக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.






