அமெரிக்காவில் குடியேறும் முயற்சியில் ஆற்றில் மூழ்கி தந்தையும், மகளும் பலியான சோகம் மனதை உலுக்கும் புகைப்படம் வைரலானது

அமெரிக்காவில் குடியேறும் முயற்சியில் ஆற்றில் மூழ்கி தந்தையும், மகளும் பலியான புகைப்படம் வைரலானது.
அமெரிக்காவில் குடியேறும் முயற்சியில் ஆற்றில் மூழ்கி தந்தையும், மகளும் பலியான சோகம் மனதை உலுக்கும் புகைப்படம் வைரலானது
Published on

மெக்சிகோ சிட்டி,

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான எல்-சல்வடார் நாட்டைச் சேர்ந்த ஆஸ்கர் ஆல்பெர்டோ மார்ட்டினஸ் (வயது 25), பிழைப்புக்கு வழிதேடி தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் தஞ்சமடைய முடிவு செய்தார்.

இதற்காக தனது மனைவி டானியா அவலோஸ் மற்றும் 2 வயது மகள் ஆங்கி வலேரியா ஆகியோருடன் கடந்த வார இறுதியில், அமெரிக்க எல்லையை ஒட்டி அமைந்துள்ள, மெக்சிகோவின் மட்டமோரோஸ் நகருக்கு சென்றார்.

சர்வதேச எல்லையில் உள்ள புவேர்டா மெக்சிகோ பாலம் வழியாக அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்த அவர்களுக்கு, அந்த பாலம் சில நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்ற செய்தி மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.

பின்னர் ரியோ கிராண்டே ஆற்றின் கரை வழியே சென்ற அவர்கள், ஆற்றில் நீரின் ஓட்டம் அமைதியாக இருப்பதாக கருதி அதில் நீந்தி சென்று அமெரிக்காவில் கரையேறிவிடலாம் என எண்ணினர்.

அதன்படி தனது மகளை தோளில் சுமந்து சென்று, அமெரிக்கக் கரைப் பகுதியில் அமர வைத்து விட்டு மீண்டும் தன் மனைவியை அழைத்துச் செல்வதற்காக மார்ட்டினஸ் மீண்டும் ஆற்றில் இறங்கினார்.

இதனால் பயந்துபோன குழந்தை ஆற்றில் குதித்தது. இதைக் கண்டு திகைத்துப் போன மார்ட்டினஸ் மகளைகாப்பாற்றும் நோக்கில் அவளை தனது சட்டையுடன் பிணைத்துக் கொண்டுள்ளார்.

அப்போது திடீரென நீரின் ஓட்டம் சீற்றமடைந்ததால் தந்தை, மகள் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். அவர்களது உடல்கள் கரை ஒதுங்கியன.

இதை மெக்சிகோவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜூலியா லி டக் என்பவர் புகைப்படம் எடுத்து வெளியிட்டார். பார்ப்பவர்களின் மனதை உலுக்கும் இந்த புகைப்படம் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.

2015-ம் ஆண்டு சிரியாவில் உள்நாட்டுப் போர் உச்சத்தில் இருந்தபோது சிரியாவிலிருந்து ஏராளமான அகதிகள் ஒரு படகில் துருக்கிக்கு பயணமாகினர். அப்போது அந்தப் படகு கடலில் மூழ்கியது.

அதில் பயணம் செய்த அய்லான் குர்தி என்னும் சிறுவனின் உடல் கடற்கரையில் ஒதுங்கியது. அந்தப் புகைப்படம் உலகம் முழுவதும் சிரிய போரின் கொடுமையை வெளிச்சம் போட்டு காட்டுவதாக அமைந்தது நினைவுகூரத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com