வினை தீர்க்கும் விநாயகர்கள்


வினை தீர்க்கும் விநாயகர்கள்
x
தினத்தந்தி 16 April 2019 2:08 PM GMT (Updated: 16 April 2019 2:08 PM GMT)

இந்து சமயத்தில் பல தெய்வ வழிபாட்டு முறை இருந்தாலும், அவற்றில் விநாயகர் மூல முதற்கடவுளாக வணங்கப்படுகிறார்.

எந்த ஒரு காரியத்தையும் தொடங்கும் முன்பு, விநாயகரை வழிபட்டால் அந்த காரியங்கள் எந்த தடையும் இன்றி நிறைவேறும் என்பது நம்பிக்கை. அரசமரத் தடியில் எளிமையாக வீற்றிருக்கும் விநாயகரை வழிபாடு செய்தால், செல்வச் செழிப்போடு வாழும் பலன் கிடைக்கும். நமக்கு அவ்வப்போது தோன்றும் வினைகளை தீர்க்கும் விநாயகர்கள் சிலரைப் பற்றி இங்கே பார்ப்போம்.

கற்பக விநாயகர்

சிவகங்கை மாவட்டத்தில் பிள்ளையார்பட்டி எனும் ஊரில் உள்ளது, பிரசித்திபெற்ற கற்பக விநாயகர் ஆலயம். இக்கோவில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது. இந்த ஆலயம் வடக்கு பார்த்த சன்னிதியில் குடவரைக் கோவிலாக விளங்குகிறது. ஆறு அடி உயரம் கொண்ட விநாயகர், சிறு குன்று போன்ற பாறையில் குடைந்த புடைப்புச் சிற்பமாக அர்த்த பத்மாசனத்தில் பிரமாண்ட உருவமாக காட்சி தருகிறார். விநாயகரின் தும்பிக்கை, வலதுபுறம் திரும்பி ‘வலம்புரி விநாயகராக’ அருள்புரிகிறார். இங்கு அம்பாள் ‘வாடாமலர்’ என்ற பெயருடனும், ஈசன் ‘அர்ச்சுனவனேஸ்வரர்’ என்ற பெயருடனும் தனித்தனி சன்னிதிகளில் வீற்றிருந்து அருள்கிறார்கள். இங்கு புதுக் கணக்கு பூஜை போடவும், புதிய செயல் தொடங்கவும் வரும் பக்தர்கள் ஏராளம். ஆயுள் விருத்தி பூஜை, சஷ்டியப்த பூர்த்தி மற்றும் சதாபிஷேகம் செய்துகொள்வதும் சிறப்பு என்பதால், இந்த ஆலயத்தில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும்.

மணக்குள விநாயகர்

விநாயகருக்கு பல ஆயிரம் ஆலயங்கள் இருந்தாலும், புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் மிகவும் பிரசித்தி பெற்றவராக விளங்குகிறார். இது 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஆலயம். இந்தக் கோவிலுக்கு அருகில் இருந்த மணலால் ஆன குளத்தில் வற்றாத நீரூற்று இருந்ததாகவும், அந்த சுவையான நீரால் விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் உள்ளன. அதனால்தான் இவருக்கு ‘மணக்குள விநாயகர்’ என்ற பெயர் வந்ததாகவும் கூறுகிறார்கள். இவருக்கு ‘வெள்ளைக்கார பிள்ளையார்’ என்ற பெயரும் உண்டு. வெள்ளைக்காரர்களால் கடலில் வீசப்பட்ட இந்த ஆலயத்தின் விநாயகர் சிலை, மீண்டும் கரைக்கு வந்து சேர்ந்ததால் இந்தப் பெயர் வந்ததாக கூறப்படுகிறது. கிழக்குப் பார்த்த சன்னிதியில் கடற்கரையோரம் உள்ள சிறிய ஆலயத்தில், நான்கு கரங்களுடன் இந்த விநாயகர் அருள்புரிகிறார். ஆலயத்தின் உட்புறச் சுவர்களில், விநாயகரின் புராணங்கள் ஓவியமாக தீட்டப்பட்டுள்ளன. இவரை வழிபட்டால் காரியத்தடை விலகும். அன்பும், அமைதியும் பெருகும்.

சுவேத விநாயகர்

கும்பகோணம் அருகில் உள்ளது, திருவலஞ்சுழி சிவாலயம். இங்குள்ள விநாயகரை இந்திரன் பூஜித்ததாக தல வரலாறு சொல்கிறது. கடல் நுரையால் செய்த விக்கிரகம் என்பதால், இந்த விநாய கருக்கு கைகளால் தொட்டு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. சங்கு கொண்டு அபிஷேகம் நிகழ்த்தப்படுகிறது. விநாயகருக்கு பச்சைக் கற்பூரம் சாத்தி வழிபடுகிறார்கள். ‘சுவேதம்’ என்பதற்கு ‘வெண்மை’ என்று பொருள். கடல் நுரை வெண்மை நிறம் கொண்டது என்பதால், இத்தல விநாயகர் ‘சுவேத விநாயகர்’ என்று பெயர் பெற்றுள்ளார். காவிரி வலமாக சுழன்று செல்வதால், இந்தத் திருத்தலத்திற்கு ‘திருவலஞ்சுழி’ என்ற பெயர் ஏற்பட்டது. இங்குள்ள இறைவனின் பெயர் ‘வலஞ்சுழிநாதர்.’ அம்பாளின் திரு நாமம் ‘பெரியநாயகி.’ இத்தல விநாயகரை தரிசித்து வழிபட்டால், பொருள் வளத்துடன், பாவங்கள் குறைந்து, வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.

சேலம் சுபா

Next Story