ஆன்மிகம்

பக்தன் வீட்டிற்கு வந்து களி உண்ட சிவபெருமான் + "||" + The devotee came home Lord Shiva who ate

பக்தன் வீட்டிற்கு வந்து களி உண்ட சிவபெருமான்

பக்தன் வீட்டிற்கு வந்து களி உண்ட சிவபெருமான்
சிதம்பரம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வாழ்ந்தவர் சேந்தனார். இவர் விறகு வெட்டி விற்று பிழைப்பு நடத்தி வந்தார். இவர் ஒரு சிவபக்தர்.
தினமும் ஒரு சிவனடியாருக்காவது உணவளித்து விட்டுதான், உணவருந்த வேண்டும் என்ற கொள்கையை கடமையாக செய்து வருபவர். அவரது பெருமையை உலகத்திற்கு உணர்த்த நினைத்தார் சிவபெருமான். ஈசன் நினைத்து விட்டால், அதற்கு தடை என்பது ஏது..

ஒரு நாள் மழை காரணமாக, சேந்தனாரால் விறகு வெட்ட செல்ல முடியவில்லை. விறகு வெட்டி விற்றால்தான், உணவு சமைக்க பொருள் வாங்க முடியும் என்ற நிலை. எனவே அவரால் அன்று சமைக்க முடியவில்லை. இருப்பினும் வீட்டில் இருந்த பொடித்து வைத்த அரிசி மாவைக் கொண்டு களி செய்து வைத்து, சிவனடியாருக்காக காத்திருந்தார். ஆனால் வெகுநேரம் ஆகியும் யாரும் வரவில்லை. இதனால் சேந்தனார் மன வருத்தம் அடைந்தார்.

அப்போது சிவனடியாரின் வேடத்தில் அங்கு சிவபெருமான் வந்தார். சேந்தனாரிடம், “சாப்பிட ஏதாவது இருக்கிறதா?” என்று கேட்டார். அகமகிழ்ந்து போன சேந்தனார், தான் சமைத்து வைத்திருந்த களியை, சிவனடியாருக்கு அன்போடு வழங்கினார். மேலும் எஞ்சியிருந்த களியையும், “அடுத்த வேளை உணவிற்காக தர முடியுமா?” என்று கேட்டு வாங்கிச் சென்றார், சிவனடியார் உருவில் இருந்த சிவபெருமான்.

அன்றைய தினம் இரவு சிதம்பரம் பகுதியை ஆண்ட அரசனின் கனவில் தோன்றிய சிவபெருமான், சேந்தனாரைப் பற்றியும், அவரது வீட்டில் தான் களி உண்டது பற்றியும் கூறினார்.

இந்த நிலையில் மறுநாள் காலை வழக்கம்போல், தில்லைவாழ் அந்தணர்கள் சிதம்பரம் கோவிலின் கருவறையைத் திறந்தனர். அப்போது சிவபெருமானைச் சுற்றி களி சிதறிக் கிடந்தது. அவரது வாய் பகுதியிலும் களி ஒட்டியிருந்தது. இதுபற்றி அவர்கள், அரசனுக்கு தெரிவித்தனர். தன் கனவில் வந்ததை நினைத்துப் பார்த்த அரசன், இறைவனின் திருவிளையாடலை எண்ணி மனம் மகிழ்ந்தான்.

மறுநாள் சிதம்பரம் கோவிலில் தேர்த் திருவிழா நடந்தது. அரசன் உள்பட பலர் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முன்தினம் பெய்த மழை காரணமாக, தேரின் சக்கரம், சகதியில் சிக்கிக்கொண்டது. பலர் முயற்சி செய்தும் பலனில்லை. இதனால் அனைவரும் மனம் வருந்தினர். அப்போது அங்கு அசரீரியாக ஈசனின் குரல் ஒலித்தது. “சேந்தா நீ பல்லாண்டு பாடு” என்றார்.

சேந்தனாரோ “ஒன்றுமே அறிந்திடாத நான் எப்படிப் பல்லாண்டு பாடுவேன்?” என்று எம்பிரானை வணங்கித் தொழுது நின்றார். எம்பிரானோ “யாம் உனக்கு அருள்புரிவோம்” என்றார்.

இதையடுத்து இறைவனின் ஆசியோடு, பதிமூன்று பாடல்களை எம்பிரானை வாழ்த்தி வணங்கிப் பாடினார். உடனே, தேர் அசைந்தது. அரசரும், சிவனடியார்களும் சேந்தனாரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார்கள். சேந்தனாரோ “அரசே.. என்னுடைய காலில் நீங்கள் விழுவதா?” என்று தயங்க, அரசரோ “நடராஜப் பெருமானே தங்களின் வீட்டிற்கு களி உண்ண வந்தார் என்றால், நான் அந்த இறைவனினும் சிறியவனே” என்றார்.

அதைக்கேட்ட சேந்தனார், தன் மீது சிவபெருமான் வைத்த கருணையை எண்ணி மனம் மகிழ்ந்தார். அவரது கண்கள் ஆனந்தத்தால் நிரம்பியது. இதன் காரணமாகவே திருவாதிரை அன்று களி உண்ண வேண்டும் என்பது வழக்கத்திற்கு வந்தது.