ஆன்மிகம்

நல்ல விஷயங்களையே பேசுவோம்.. + "||" + Let's talk good things ..

நல்ல விஷயங்களையே பேசுவோம்..

நல்ல விஷயங்களையே பேசுவோம்..
கவுசிகன் என்ற இயற்பெயரைக் கொண்ட விஸ்வாமித்திரர், ஆரம்பத்தில் மன்னனாக இருந்து பின்னர் தன்னுடைய கடுமையான தவ வலிமையால் பிரம்ம ரிஷி பட்டம் பெற்றவர்.
வசிஷ்டருக்கும், இவருக்கும் தொடக்க காலத்தில் ஏற்பட்ட மோதலே, மன்னனாக இருந்த கவுசிகனை, விஸ்வாமித்திர மகரிஷியாக மாற்றியது. அதன்பிறகு வசிஷ்டரும், விஸ்வாமித்திரரும் நட்புடனேயே பழகி வந்தனர். அப்படி ஒரு காலகட்டத்தில் விஸ்வாமித்திரரை பார்க்க, வசிஷ்டர் வந்திருந்தார். அவர்கள் இருவரும் பல மணி நேரம் உரையாடிக் கொண்டிருந்தனர். பின்னர் விடைபெறும் நேரத்தில் விஸ்வாமித்திரர், 
வசிஷ்டருக்கு மறக்க முடியாத அன்பளிப்பு ஒன்றை வழங்க நினைத்தார். அதனால், தான் ஆயிரம் ஆண்டுகளாக செய்து வந்த தவத்தின் பலனை எல்லாம் வசிஷ்டருக்கு அளித்தார். அதனை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட வசிஷ்டர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இன்னொரு சமயத்தில் வசிஷ்டரின் ஆசிரமத்திற்குச் சென்றிருந்தார், விஸ்வாமித்திரர். வசிஷ்டர் அவரை அன்புடன் உபசரித்து விருந்து படைத்தார். அவரோடு பல மணி நேரங்கள் பேசிக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் புண்ணியம் தரும் விஷயங்களை மட்டுமே இருவரும் பேசினார்கள். விடைபெறும் சமயத்தில், 
விஸ்வாமித்திரருக்கு பரிசளிக்க விரும்பிய வசிஷ்டர், “நாம் இவ்வளவு நேரமும் பேசிக்கொண்டிருந்த நல்ல விஷயங்களால் ஏற்பட்ட புண்ணியத்தை உங்களுக்குத் தருகிறேன்” என்று கூறினார். இதைக் கேட்ட விஸ்வாமித்திரரின் முகம் புன்னகையை இழந்தது. அவரது முக மாற்றத்திற்கான காரணத்தை புரிந்து கொண்ட வசிஷ்டர், “நீங்கள் எனக்கு ஆயிரம் ஆண்டுகளாக செய்த தவத்தின் பலனை அளித்தீர்கள். ஆனால் நானோ, இந்த அரை நாளில் நல்ல விஷயங்கள் பற்றி பேசியதால் கிடைத்த புண்ணியத்தை கொடுத்தேன். இந்த இரண்டும் எப்படி சமமாகும் என்றுதானே நினைக்கிறீர்கள்?” என்று கேட்டார். ‘ஆம்’ என்பது போல தலையசைத்தார், விஸ்வாமித்திரர்.

“நாம் இருவரும் பகிர்ந்துகொண்ட பலன்களில், எது சிறந்தது என்பதை பிரம்மதேவனிடம் கேட்டு தெரிந்துகொள்வோம்” என்றபடி, விஸ்வாமித்திரரை அழைத்துக் கொண்டு சத்தியலோகம் வந்தார், வசிஷ்டர். அங்கு பிரம்மனிடம் தங்களின் பிரச்சினைக்கான தீர்வைக் கேட்டனர். அதற்கு பதிலளித்த பிரம்மன், “இந்த விஷயத்தில் தீர்ப்பு சொல்ல என்னால் முடியவில்லை. நீங்கள் இருவரும் விஷ்ணுவிடம் முறையிடுங்கள்” என்று கூறிவிட்டார். இதைடுத்து மகா முனிவர்கள் இருவரும் விஷ்ணுவிடம் சென்று, தங்களின் சந்தேகத்திற்கான தீர்வை கேட்டனர். மகாவிஷ்ணுவோ, “என்னை விட சிவனுக்குத் தான், தவ வாழ்வில் அதிக அனுபவம் இருக்கிறது. எனவே அவரிடம் கேட்டால் உண்மை விளங்கும்” என்று அனுப்பிவைத்துவிட்டார். இருவரும் இப்போது கயிலாயத்தில் வீற்றிருந்த ஈசனின் முன்பாக வந்து நின்றனர். அவர்களின் பிரச்சினையைக் கேட்ட சிவனும், “உங்களுக்கு தெளிவு வேண்டுமானால் பாதாள லோகத்தில் உள்ள ஆதிசேஷனின் உதவியை நாடுங்கள்” என்று சொல்லிவிட்டு, தவத்தில் ஆழ்ந்தார்.

பாதாளலோகம் வந்த வசிஷ்டரும், விஸ்வாமித்திரரும் தங்களின் சந்தேகத்தை ஆதிசேஷனிடம் எடுத்துக்கூறி, தீர்வு கேட்டனர். “இந்த விஷயத்தில் யோசித்துதான் பதிலளிக்க வேண்டும். அதுவரை இந்த பூமி பந்தை தாங்கும் பணியை நீங்கள் செய்யுங்கள். பூமியை என்னைப் போல் தலையில் சுமக்க உங்களால் இயலாது. எனவே உங்களின் சக்தியை பயன்படுத்தி இதை ஆகாயத்தில் நிலை நிறுத்தி வையுங்கள்” என்றார், ஆதிசேஷன். உடனே விஸ்வாமித்திரர், “நான் இப்போதே ஆயிரம் ஆண்டுகள் செய்த தவத்தின் சக்தியை கொடுக்கிறேன். அதன் பயனாக பூமி ஆகாயத்தில் நிலைபெற்று நிற்கட்டும்” என்றார். ஆனால் பூமியில் எந்த மாற்றமும் உண்டாகவில்லை. அது ஆதிசேஷனின் தலையிலேயே நின்றுகொண்டிருந்தது. அடுத்ததாக வசிஷ்டர், “அரைமணி நேரம் நல்ல விஷயங்களை பேசியதால் உண்டாகும் புண்ணியத்தைக் கொடுக்கிறேன். இந்த பூமி அந்தரத்தில் நிற்கட்டும்” என்றார். இதைச் சொன்னதும் ஆதிசேஷனின் தலையில் இருந்த பூமி மேலெழும்பி, அந்தரத்தில் நின்றது. ஆதிசேஷன் பூமியை எடுத்து மீண்டும் தன் தலை மீது வைத்துக்கொண்டு, “இருவரும் வந்த வேலை முடிந்துவிட்டது. போய் வாருங்கள்” என்றார்.

இருவருக்கும் ஒன்றும் விளங்கவில்லை. ‘எங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்லாமல், போகச் சொன்னால் எப்படி?’ என்பது போல் ஆதிசேஷனைப் பார்த்தனர். அவர்களின் பார்வைக்கான அர்த்தத்தை புரிந்து கொண்ட ஆதிசேஷன், “உண்மையை நேரில் பார்த்த பிறகு தீர்ப்பு சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆயிரம் ஆண்டு தவ சக்தியால் அசையாத பூமி, அரைமணி நேர நல்ல விஷயங்கள் பேசிய பலனுக்கு அசைந்து விட்டது பார்த்தீர்களா?. நல்லவர்களுடன் நல்ல விஷயங்களைப் பேசி உறவாடுவதால் கிடைக்கும் புண்ணியம், தவத்தால் கிடைக்கும் புண்ணியத்தை விட சிறப்பானது” என்றார் 
ஆதிசேஷன்.