வேண்டிய வரம் தரும் அரங்கேற்ற அய்யனார்


வேண்டிய வரம் தரும் அரங்கேற்ற அய்யனார்
x
தினத்தந்தி 8 Jun 2021 10:02 AM GMT (Updated: 2021-06-08T15:32:55+05:30)

திருப்பட்டூர் திருத்தலத்தில் உள்ள அய்யனார் கோவில் மிகப்பெரிய பிரகாரங்களுடன் அமைந்த தலமாக திகழ்கிறது.

கோவில் தோற்றம்
கிராமங்களின் காவல் தெய்வமாக இருப்பவர், ‘அய்யனார்’. பல கிராமங்களில் உயரமான உருவத்துடன், கையில் வாள் ஏந்தியபடி, முறுக்கு மீசையுடன் இவர் காட்சியளிப்பார். அவருக்கு முன்பாக குதிரை அல்லது யானை வாகனம் அமைந்திருக்கும். பல இடங்களில் அய்யனார்தான், ‘சாஸ்தா’ என்ற பெயரில், பலரது குடும்பங்களுக்கும் குலதெய்வமாக இருக்கிறார். இவரை வழிபட்டாலே அனைத்து  தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைத்துவிடும். பெரும்பாலும் சாஸ்தா அல்லது அய்யனார் கோவில்கள், மிகச் சிறிய அளவிலேயே இருக்கும்.ஆனால் திருப்பட்டூர் திருத்தலத்தில் உள்ள அய்யனார் கோவில் மிகப்பெரிய பிரகாரங்களுடன் அமைந்த தலமாக திகழ்கிறது. இத்தல அய்யனார், ‘அரங்கேற்ற அய்யனார்’ என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இவரது கையில் ‘ஞான உலா’ என்னும் ஓலைச்சுவடி இருப்பது சிறப்புக்குரியது. திருக்கயிலாயத்துக்கு நிகரான தலமாக திருப்பட்டூர் திருத்தலம் போற்றப்படுகிறது. அதற்கு காரணம், இங்குள்ள பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில். இது பிரம்மதேவன், சிவபெருமானை நோக்கி தவம் புரிந்த தலம் ஆகும். அதே போல் வியாக்ரபாதரும், பதஞ்சலி முனிவரும் இத்தல இறைவனை வழிபட்டிருக்கிறார்கள். இங்கு காசி விஸ்வநாதர் கோவில், 
மாரியம்மன் கோவில் போன்ற சிறப்புமிக்க தலங்களும் இருக்கிறது.

அதோடு திருப்பட்டூருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் அமைந்ததுதான் ‘அரங்கேற்ற அய்யனார் கோவில்’. திருப்பட்டூர் ஊருக்குள் நுழையும் போதே இந்த ஆலயத்தை தரிசிக்க முடியும். தமிழ்நாட்டில் ராஜகோபுரத்துடன் அமைந்த அய்யனார் ஆலயம் இது ஒன்றுதான் என்றும் சொல்கிறார்கள். அதோடு அய்யனாருக்கான மிகப்பெரிய திருக்கோவிலாகவும் இது பார்க்கப்படுகிறது. இந்த ஆலயத்தில் பூரணை-புஷ்கலா தேவியருடன் அய்யனார் வீற்றிருக்கிறார். பூமியில் வாழும் மக்கள் அனைவரும் அறியாமை என்னும் இருள் நீங்கி, கல்வி ஞானம் அடையும் வகையில் சிவபெருமான் உத்தரவின்படி, சேரமான் பெருமான் நாயனார் அருளியதுதான் ‘திருக்கயிலாய ஞான உலா’ என்னும் நூல். இந்த அரிய பொக்கிஷமான நூலை, மாசாத்தனார் என்னும் திருப்பெயரைக் கொண்ட அய்யனார் அரங்கேற்றிய தலம் இதுவாகும். அதன் காரணமாகத்தான், அவரது திருக்கரத்தில் ஓலைச்சுவடியை தாங்கி இருக்கிறார்.

இத்தலம் வந்து இந்த அய்யனாரை வேண்டுபவர்களுக்கு, கல்வி ஞானம் பெருகும் என்பது நம்பிக்கை. இந்த ஆலயத்திற்கு வரும் ஒருவர், தன்னுடைய வேண்டுதலை வைத்த 90 நாட்களில் அது நிறைவேறும் அதிசயத்தைக் காணலாம். அப்படி நிறைவேறும் வேண்டுதல்களுக்குப் பின்னர், சம்பந்தப்பட்டவர்கள், இங்குள்ள அய்யனாரின் வாகனமான யானைக்கு சிதறு தேங்காய் உடைத்து, ஜன்னல் வழியாக அய்யனாரை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம். அய்யனாரின் வாகனமான யானை சிலை, ஒற்றைக் கல்லில் வடிக்கப்பட்டது என்கிறார்கள்.

வேண்டுதலைப் பொறுத்து, ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு எண்ணிக்கையில் சிதறு தேங்காய் உடைக்கும் வழிபாட்டு முறை இங்கு இருக்கிறது. திருமணம் விரைந்து நடைபெற 11 தேங்காய்கள் உடைக்க வேண்டும். குழந்தை வரம் கிடைக்க 9 தேங்காய்களை சிதறடிக்க வேண்டும். கடன் பிரச்சினைக்கு 7 தேங்காய்கள், உயர் கல்வியில் சிறந்து விளங்க 5 தேங்காய்கள் என்ற எண்ணிக்கையில் தேங்காய்களை சிதறு காய் போட வேண்டும். இவ்வாறு செய்தால் அனைத்து வேண்டுதல்களும் விரைவிலேயே அய்யனாரால் பூர்த்தி செய்து வைக்கப்படும்.

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் உள்ளது திருப்பட்டூர்.

Next Story