'இந்தியா' கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காது - பரபரப்பை ஏற்படுத்திய சித்தராமையா


இந்தியா கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காது - பரபரப்பை ஏற்படுத்திய சித்தராமையா
x

கோப்புப்படம்

‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள், தனி பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சியை பிடிப்போம் என கூறி வருகின்றனர்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 26 மற்றும் மே மாதம் 7-ந்தேதி என 2 கட்டங்களாக நடக்க உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான 'இந்தியா' கூட்டணி, பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என பிரதமர் மோடி கூறி வருகிறாா். 'இந்தியா' கூட்டணி தலைவர்களும், தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிப்போம் என கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த சித்தராமையா, "நாடாளுமன்ற தேர்தலில் 'இந்தியா' கூட்டணிக்கு தனி பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம். ஆனால் அதே நேரத்தில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காது. 'இந்தியா' கூட்டணி மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் சில கட்சிகளை நம்பியிருக்க வேண்டிருக்கும்.

கடந்த 2 தேர்தல்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதில் பா.ஜனதா தங்களுக்கு தனி பெரும்பான்மை கிடைத்துவிட்டதாக கூறுகிறார்கள். ஆனால் கூட்டணி கட்சிகளின் வாக்குகளை சேர்த்து அக்கட்சிக்கு தனி பெரும்பான்மை கிடைத்துள்ளது. பா.ஜனதா தனது வாக்கு சதவீதத்தை அதிகரித்திருக்கலாம். ஆனால் தனித்து ஆட்சிக்கு வந்துவிட்டது என கூற முடியாது.

2½ ஆண்டுகளுக்கு பிறகு முதல்-மந்திரி பதவியை விட்டு கொடுக்க வேண்டும் என்பது கட்சி மேலிடம் எடுக்கும் முடிவை பொறுத்தது. கட்சி மேலிடம் என்னை முதல்-மந்திரியாக தொடரும்படி கூறினால் அந்த பதவியில் தொடருவேன். முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகும்படி மேலிடம் உத்தரவிட்டால், அதனை ஏற்று பதவி விலகுவேன். கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன். 4 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் அரசியலில் இருந்து விலகுவேன். ஆனால் தொடர்ந்து அரசியலில் இருப்பேன்" என்று அவர் கூறினார்.


Next Story