தமிழ்நாட்டின் மீது பிரதமர் மோடி சிறிய அளவிலேயே கவனம் செலுத்தியுள்ளார் என்பது வரலாறு - காங்கிரஸ் விமர்சனம்
தமிழ்நாட்டின் மீது பிரதமர் மோடி சிறிய அளவிலேயே கவனம் செலுத்தியுள்ளார் என்பது வரலாறு என காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.
டெல்லி,
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் களம் பரபரப்படைந்துள்ளது. தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே பிரதமர் மோடி தமிழ்நாடு, கேரளாவில் அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் முதல்முறையாக பிரதமர் மோடி நேற்று தமிழ்நாடு வந்தார். கோவை சென்ற பிரதமர் மோடி அங்கு வாகன பேரணி நடத்தினார். இதனை தொடர்ந்து இன்று காலை கேரளா மாநிலம் பாலக்காடு சென்ற பிரதமர் மோடி மதியம் மீண்டும் சேலம் வந்தார்.
கேரளாவில் இருந்து ஹெலிகாப்டர் சேலம் வந்த பிரதமர் மோடி கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். பிரதமர் மோடி விழா மேடைக்கு திறந்த வாகனத்தில் வந்தார். பின்னர், பொதுக்கூட்டத்தில் திரண்டிருந்த பா.ஜ.க.வினர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் கேரளா, தமிழ்நாடு பயணம் குறித்து காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில்,
பிரதமர் மோடி இன்று தமிழ்நாட்டின் சேலம், கேரளாவின் பாலக்காட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் சில கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். கடந்த சில வாரங்களாக பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு அடிக்கடி பயணம் மேற்கொள்ளும்நிலையில், அவர் தமிழ்நாட்டின் மீது சிறிய அளவிலேயே கவனம் செலுத்தியுள்ளார் என்பது வரலாறு.
அதற்கு சான்றாக, 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் மிக்ஜம் புயல் பாதிப்பின்போது பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு செல்லவில்லை. புயல் பாதிப்பிற்கு பின் மறுகட்டமைப்பு, நிவாரணமாக 37 ஆயிரத்து 907 கோடி ரூபாய் ஒதுக்கும்படி தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசிடம் தொடர்ச்சியாக கேட்டார்.
தமிழ்நாடு மக்களின் இந்த முக்கிய தேவையை நிறைவேற்ற பிரதமர் மோடி திட்டம் வைத்துள்ளாரா?. சேலம் பயணத்தின்போது ஏராளமான ஜவுளி தொழிற்சாலைகள் மூடப்பட்டு கிடப்பதையும், எந்திரங்கள் பழுதடைந்து கிடப்பதையும், தொழிலாளர்களின் பணிநேரம் குறைக்கப்பட்டிருப்பதையும் பிரதமர் மோடி கவனித்திருப்பார் என நம்புகிறேன்.
பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., திட்டமிடப்படாத கொரோனா ஊரடங்கு மூலம் ஒன்றை ஆளாக இந்தியாவின் சிறு,குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை அழித்தப்பின் ஜவுளி தொழிச்சாலைகளை மீட்பதுகுறித்த பிரதமர் மோடியின் திட்டம் என்ன?
பிரதமர் மோடி கேரளாவை சோமாலியாவுடன் ஒப்பிட்டு பேசினார். அனைத்து மாநிலங்களை விட கேரளாவின் வளர்ச்சி தொடர்ச்சியாக சிறந்த நிலையில் உள்ளது. கேரளா குறித்து தவறாக கருத்து கூறிய பிரதமர் மோடி கேரள மக்களிடம் இறுதியாக மன்னிப்பு கேட்பாரா?
இவ்வாறு அவர் கூறினார்.