தமிழகம் வரும் பிரதமர் மோடியின் திருத்தப்பட்ட சுற்றுப்பயண விவரம் வெளியீடு
தமிழ்நாட்டில் சென்னை, நீலகிரி, வேலூரில் பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதுதொடர்பான சுற்றுப் பயணம் விவரம் ஏற்கனவே வெளியிடப்பட்டு இருந்தது.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திரமோடி நாளையும் (செவ்வாய்க்கிழமையும்), நாளை மறுதினமும் (புதன்கிழமை) என 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வருகிறார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, தமிழ்நாட்டுக்கு அவர் தொடர்ந்து பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார்.
அந்த வகையில் தமிழ்நாட்டில் சென்னை, நீலகிரி, வேலூரில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதுதொடர்பான சுற்றுப் பயணம் விவரம் ஏற்கனவே வெளியிடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் திருத்தப்பட்ட சுற்றுப் பயணம் குறித்த விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி, நாளை உத்தரபிரதேசம் மாநில பிலிபிட் பகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தை முடித்துக் கொண்டு, பிற்பகல் 2.45 மணிக்கு கேரளா மாநிலம் பாலக்காடுவுக்கு செல்கிறார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்னைக்கு மாலை 6.30 மணிக்கு வருகிறார். சென்னையில் ரோட் ஷோவில் பங்கேற்று, பா.ஜனதா சார்பில் போட்டியிடும் தென் சென்னை தொகுதி வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், வடசென்னை வேட்பாளர் பால்கனகராஜ், மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் செல்வம் ஆகியோருக்கு ஆதரவு திரட்டுகிறார். அதனை முடித்துக் கொண்டு, அன்றைய தினம் இரவு சென்னை கிண்டி ராஜ்பவனில் தங்குகிறார்.
அதற்கு மறுநாள் சென்னையில் இருந்து வேலூருக்கு காலை 10.30 மணிக்கு சென்றடைகிறார். அங்கு பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு வேலூரில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவு கேட்டு பேசுகிறார். பின்னர் அங்கிருந்து மேட்டுப்பாளையத்துக்கு பிற்பகல் 1.45 மணிக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு நீலகிரி தொகுதி பா.ஜனதா வேட்பாளரான எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டுகிறார். அங்கு பிரசாரத்தை முடித்த பின்னர், மராட்டிய மாநிலத்துக்கு மாலை 6 மணிக்கு சென்றடைகிறார்.