மராட்டிய மாநிலம் நாசிக்கில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் கோட்டை இது.
ஹரிஹர் கோட்டை, ஹசர்காட் என அழைக்கப்படும் இது திரியம்பகேஷ்வரர் மலைத்தொடரில், 3,676 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது.
இந்த கோட்டையின் உச்சிப்பகுதியை சென்றடைவதற்கு குறுகிய படிக்கட்டுகளில் ஏறிச்செல்ல வேண்டும்.
பாறைகளை வெட்டி 80 டிகிரி சாய்வில் அமைக்கப்பட்டிருக்கும் அதன் மீது ஏறுவது சவாலானது.
உயரத்தை பற்றி பயம் கொள்பவர்களை இன்னும் பீதியில் ஆழ்த்திவிடும். எனினும் படிக்கட்டுகளின் இரு புறமும் சிறு பள்ளம் போல் அமைக்கப்பட்டிருக்கும் கைப்பிடிகள் ஏறுவதற்கு பாதுகாப்பானதாகவே இருக்கும்.
மழைக்காலம்தான் ரொம்ப சவாலாக இருக்கும். படிக்கட்டுகளில் படிந்திருக்கும் பாசிகளும், பாறையும் வழுக்கும். அந்த சமயத்தில் கூடுதல் கவனத்துடன் பயணிக்க வேண்டும்.
இதில் மலையேற்றம் செய்பவர்களுக்கு சாகச பயண அனுபவத்தையும், உற்சாகமான மன நிலையையும் அளிக்கும்.
மலையின் உச்சி பகுதிக்கு சென்றடைந்த பிறகு 360 டிகிரி கோணத்தில் சுற்றியுள்ள கிராம பகுதிகளை பார்ப்பதும், பசுமை சூழ்ந்த இயற்கை அம்சங்களை ரசிப்பதும் அலாதி ஆனந்தத்தை அளிக்கும்.