இரு மலைகளுக்கு நடுவில் அமைந்திருக்கும் பள்ளத்தாக்கு பகுதியில் அடர்த்தியாக மரம், செடி, கொடிகள் வளர்ந்திருக்கும்.
அவை பச்சை பசேலென மிளிர்ந்து பள்ளத்தாக்குக்கு அழகிய தோற்றத்தை ஏற்படுத்திக்கொடுக்கும். மரம், செடி, கொடிகளுக்கு நடுவே ஆங்காங்கே பூக்களும் பூத்துக்குலுங்கும்.
ஆனால் ஒரே இடத்தில் அடர்த்தியாக, பள்ளத்தாக்கு முழுவதும் காண்பது அரிது. அப்படிப்பட்ட இடங்களுள் ஒன்றாக உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள மலர் பள்ளத்தாக்கு விளங்குகிறது.
இங்கு 500-க்கும் மேற்பட்ட மலர் இனங்கள் உள்ளன.
அவற்றுள் ஆர்க்கிட், பாப்பி, பிரிமுலா, சாமந்தி, டெய்ஸி உள்ளிட்ட மலர்கள் குறிப்பிடத்தக்கவை.
அவை விதவிதமான வண்ணங்களில் பூத்துக்குலுங்குவதால் அந்த பகுதியே வண்ணமயமாக மலர் கண்காட்சி போன்று காட்சி அளிக்கும்.
ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் அதிக பூக்களை காண முடியும்.
மலர்களின் ராஜ்ஜியம் நடக்கும் இந்த பள்ளத்தாக்கு யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலிலும் இடம் பிடித்துள்ளது.