சில்லுனு ஒரு விசிட் ...தமிழகத்தின் சிறந்த மலை சுற்றுலா தலங்கள்..!
ஊட்டி : தமிழ்நாட்டில் உள்ள மலைவாழிடங்களின் மகுடமாகத் திகழும் ஊட்டி, பிரபலமான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இங்கு ரோஜாத்தோட்டம், தொட்டபெட்டா சிகரம், பைன் காடுகள், தேயிலை தோட்டங்கள், பைகாரா நீர்வீழ்ச்சி மற்றும் தாவரவியல் பூங்கா ஆகிய இடங்கள் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கின்றன.
கொடைக்கானல் : கடல் மட்டத்திலிருந்து 2100மீ உயரத்தில் அமைந்துள்ள கொடைக்கானல், மலைகளின் இளவரசி என்றழைப்படுகிறது. கொடைக்கானல் ஏரி, கோக்கர்ஸ் வாக், பிரயான் பூங்கா, வெள்ளி நீர் வீழ்ச்சி மற்றும் செண்பகனூர் அருங்காட்சியகம் ஆகிய இடங்கள் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கின்றன.
ஏற்காடு : தென்இந்தியாவின் ஆபரணம் என்றும் ஏழைகளின் ஊட்டி என்றும் அழைக்கப்படும் ஏற்காடு, கடல் மட்டத்திலிருந்து 1515மீ உயரத்தில் அமைந்துள்ளது. ஏற்காடு ஏரி, கரடி குகை மற்றும் சில்க் பண்ணை ஆகிய இடங்கள் இங்கு பார்க்க வேண்டியவை ஆகும்.
ஏலகிரி : வேலூர் மாவட்டம் வாணியம்பாடி, அருகே கடல் மட்டத்திலிருந்து 4600 அடி உயரத்தில் உள்ளது. இங்கு பறந்து விரிந்த புங்கனூர் அருவியில் படகு சவாரி செய்யலாம். கண்ணுக்கு விருந்தாக ஜலங்கம் பாறை அருவி, சாகச விளையாட்டுகளுக்கு, மலை ஏற்ற வசதிகளும் இருக்கிறது.
சிறுமலை : திண்டுக்கல் நகரிலிருந்து 25 கி.மீ தூரத்தில் இருக்கிறது. கொடைக்கானல் மலையைவிட அதிகமாக 18 கொண்டைஊசி வளைவுகளைக் கொண்டது. இங்கு அடர்ந்த காடுகளும், நல்ல சீதோஷன நிலை உள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 1600 மீட்டர் உயரத்தில் உள்ளது. மாலை நேரங்களில் இதமான காலநிலைக்கு ஏற்ற இடமாகும்.
கொல்லிமலை : திருச்சி நகரங்களிலிருந்து 90 கி.மீ. தூரத்தில் உள்ள அழகிய மலை கொல்லிமலை. மரங்கள் சூழ்ந்த மலை சாலையில் மரங்களின் நிழல்களுக்கு இடையே 72 கொண்டை ஊசி வளைவுகளில் பயணிப்பதே தனி சுகம். அருவிகள் அச்சரிவில் ஒலியோடு விழுந்து செல்லும். அச்சிற்றாற்றுப் படுகைகளின் உச்சியைக் கடந்து செல்லும் மலை வழிப் பாதையாகும்.
கோத்தகிரி : நீலகிரி மலைத்தொடரில் கடல் மட்டத்திலிருந்து 5800 அடி உயரத்தில் உள்ள மற்றொரு தேயிலை தோட்ட மலையாகும். மணம் வீசும் யூகாலிப்டஸ் மரங்கள் கூடுதல் அழகு. கோடை விடுமுறையை கொண்டாட சிறந்த சுற்றுலாத்தலமாகும்.
மேகமலை : ஆங்கிலேயர் காலத்தில் அவர்களுக்குச் சொந்தமான தனி தேயிலைத் தோட்டமாகும். இது 5 ஆயிரம் அடி உயரத்தில் மேகக் கூட்டம் நிறைந்து மலை குன்றுகள் மீது தவழ்ந்து செல்வதால் மேகமலை ஆனது. கோடையில் அழகிய நீல வானத்தைப் பார்க்கலாம். ஏரி, நீர் நிலைகள் சூழ்ந்த அழகிய தேயிலை தோட்டங்கள் சூழ்ந்த சுற்றுலா மையமாகும்.
வால்பாறை : மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரின் மேற்குச் சரிவில் தமிழக பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 3500 அடி உயரத்தில் இருக்கிறது. வால்பாறை. சுற்றிலும் தேயிலை, காப்பி தோட்டங்கள், வானுயர மரங்கள், சோலைகள், அருவிகள், நீரோடைகள், தடுப்பணைகள் என்று இயற்கை பல வடிவங்களில் காணப்படுகிறது.