அற்புதங்கள் நிறைந்த ஐப்பசி மாத ராசிபலன்..

18-10-2022 முதல் 16-11-2022 வரை
கருத்துக்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ளும் மேஷ ராசி நேயர்களே! மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் சகாய ஸ்தானத்தில் இருக்கிறார். இவர் மாதத்தின் மையப் பகுதியில் வக்ரம் பெறுவதால் உடல்நலனில் கவனம் தேவை. எந்தக் காரியமும் அதிக முயற்சிக்குப் பிறகே பலன் தரும்.
இம்மாதம் செவ்வாய்க்கிழமை தோறும் முருகப்பெருமானை வழிபட்டால் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.
சமூக சேவையில் ஈடுபட்டு பிறருக்கு உதவ விரும்பும் ரிஷப ராசி நேயர்களே! உங்கள் ராசிநாதன் சுக்ரன் மாதத் தொடக்கத்திலேயே சொந்த வீட்டிற்குச் சென்று பலம் பெறப் போகிறார். எனவே ஆரோக்கியம் சீராகும். ஆதாயம் தரும் தகவல் அதிகம் கிடைக்கும்.
வெள்ளிக்கிழமை தோறும் சிவன், அம்பாளை வழிபாடு செய்து வந்தால் செல்வநிலை உயரும்.
ஆலோசனை சொல்வதில் அசகாய சூரர்களான மிதுன ராசி நேயர்களே..! மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன், சூரியனோடு இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்குகிறார். எனவே பொருளாதார நிலை சிறப்பாக அமைந்தாலும், அஷ்டமத்துச் சனி வலுவடைந்திருப்பதால் விரயங்களே அதிகரிக்கும். திட்டமிட்டபடி எதையும் செய்ய இயலாது.
இம்மாதம் சனிக்கிழமை தோறும் லட்சுமி வழிபாடு விருப்பங்களை நிறைவேற்றும்.
பிறரை பார்த்தவுடன் எடைபோடும் வல்லமை பெற்ற கடக ராசி நேயர்களே! மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சந்திரன் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். அவர் மீது குருவின் பார்வை பதிகிறது. எனவே பொருளாதார முன்னேற்றமும், புதிய திருப்பங்களும் ஏற்படும்.
இம்மாதம் குரு தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும்.
வேகத்தோடு விவேகமும் கொண்டு செயல்படும் சிம்ம ராசி நேயர்களே! உங்கள் ராசிநாதன் சூரியன் நீ்ச்சம் பெற்றாலும், உச்சம் பெற்ற சுக்ரன் மாத தொடக்கத்திலேயே சூரியனுடன் இணைந்து 'நீச்சபங்க ராஜ யோக'த்தை உருவாக்குகிறார். இதனால் நல்ல மாற்றங்களும், ஏற்றங்களும் வந்து சேரும். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
இம்மாதம் ஞாயிற்றுக்கிழமை தோறும் விநாயகப்பெருமானை வழிபடுவது நன்மை தரும்.
உதவி செய்வதால் பிறர் உள்ளத்தில் இடம்பிடிக்கும் கன்னி ராசி நேயர்களே! மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் உச்சம் பெற்றிருக்கிறார். குருவின் பார்வையும் உங்கள் ராசியில் பதிகிறது. எனவே ஆரோக்கியம் சீராகும். அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும்.
இம்மாதம் செவ்வாய்க்கிழமை தோறும் துர்க்கை வழிபாடு செய்து வந்தால் துயரங்கள் விலகும்.
எதையும் ஆராய்ந்து அறிந்த பிறகே செயல்படும் துலாம் ராசி நேயர்களே! மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் உங்கள் ராசிக்கே வரப்போகிறார். எனவே சென்ற மாதத்தைக் காட்டிலும் இந்த மாதம் சிறப்பாக அமையும். செலவிற்கேற்ற வரவும் வந்து சேரும். ஆரோக்கியத்தில் மட்டும் அக்கறை தேவை.
இம்மாதம் வெள்ளிக்கிழமை தோறும் லட்சுமிதேவி வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.
வெற்றியை குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் விருச்சிக ராசி நேயர்களே! மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் அஷ்டமத்தில் சஞ்சரிக்கிறார். அவரது பார்வை தன ஸ்தானத்தில் பதிகிறது. குருவின் பார்வையும் உங்கள் ராசியில் பதிவதால் தொழில் வளம் சிறக்கும். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலை உயரும்.
இம்மாதம் பிரதோஷ நேரத்தில் நந்தியை வழிபடுவதன் மூலம் நலங்களும், வளங்களும் வந்து சேரும்.
பிறருக்கு உதவ வேண்டுமென்று எண்ணும் தனுசு ராசி நேயர்களே! தனாதிபதி சனி வக்ர நிவர்த்தியானதாலும், லாப ஸ்தானம் பலம் பெறுவதாலும் பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
இம்மாதம் சனிக்கிழமை தோறும் சனீஸ்வரரையும், அனுமனையும் வழிபடுவதன் மூலம் இனிய பலன்களை வரவழைத்துக் கொள்ள இயலும்.
முயற்சி அனைத்தையும் முடித்துக் காட்டும் மகர ராசி நேயர்களே! மாதத் தொடக்கத்தில் ராசிநாதன் சனி வக்ர நிவர்த்தியாகி பலம்பெற்று சஞ்சரிப்பதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இருப்பினும் செவ்வாயின் பார்வை சனியின் மீது பதிவதால் எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல் தோன்றும்.
இம்மாதம் சனிக்கிழமை தோறும் ஆதியந்தப் பிரபுவை வழிபடுவது நல்லது.
உயர்நிலையை அடைய கடுமையாக உழைக்கும் கும்ப ராசி நேயர்களே! ஏழரைச் சனியில் விரயச் சனியின் ஆதிக்கம் நடைபெறுகிறது. மேலும் செவ்வாய் சனியைப் பார்க்கிறார். எனவே மிகமிக கவனம் தேவைப்படும் நேரம் இது.
இம்மாதம் நரசிம்ம மூர்த்தி வழிபாடு நன்மை வழங்கும்.
வளைந்து கொடுத்து வாழ்வில் முன்னேறும் மீன ராசி நேயர்களே! மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உச்சம் பெற்ற புதன் பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. எனவே பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய திருப்பங்கள் ஏற்படும்.
இம்மாதம் பைரவர் வழிபாடு வளர்ச்சியைக் கூட்டும்.