ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 1984-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும்.

கடைசியாக 2018-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த போட்டியில் இந்திய அணி, வங்காளதேசத்தை கடைசி பந்தில் வீழ்த்தி வாகை சூடியது.
கொரோனா பாதிப்பு காரணமாக 2020-ம் ஆண்டு போட்டி நடத்தப்படவில்லை.
உலக கோப்பைக்கு தயார்
ஆரம்பத்தில் ஆசிய கோப்பை தொடர் 50 ஓவர் வடிவில் நடத்தப்பட்டது. அதன் பிறகு 20 ஓவர் வடிவம் புகுத்தப்பட்டது. அதாவது அந்த சமயத்தில் எந்த உலக கோப்பை போட்டி நெருங்கி வருகிறதோ அதற்கு சிறந்த முறையில் தயாராகும் பொருட்டு அந்த வடிவில் நடத்தப்படுகிறது.
AFP
இந்த ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை
இந்த ஆண்டு அக்டோபர்-நவம்பரில் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்க இருப்பதால் ஆசிய கோப்பையும் 20 ஓவர் வடிவில் அரங்கேறுகிறது. அடுத்த ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை வருவதால் அடுத்த ஆசிய கோப்பை போட்டி 50 ஓவர் வடிவில் நடத்தப்படும்
AFP
இலங்கை பொருளாதார நெருக்கடி
இந்தமுறை இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை தங்களால் இந்த போட்டியை நடத்த இயலாது என்று கூறி விட்டது.
இதையடுத்து அங்கு நடைபெற இருந்த 15-வது ஆசிய கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது.
இந்தியாவின் ஆதிக்கம்
ஆசிய கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா தான் அதிகமாக ஆதிக்கம் செலுத்தியுள்ளது. 7 முறை கோப்பையை வென்று இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக இலங்கை 5 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் வென்றுள்ளன.
AFP
இந்த முறை சரிசம பலத்துடன் களம் காணும் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளில் ஒன்றே கோப்பையை கைப்பற்றும் என்பது பெரும்பாலான கிரிக்கெட் நிபுணர்களின் கணிப்பாகும்.
AFP
38 ஆண்டுகால ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் மறக்க முடியாத பல ஆட்டங்களை பார்த்திருக்கிறோம். அவற்றில் சிலவற்றை காண்போம்
AFP
மாயாஜால பந்து வீச்சு
2008-ம் ஆண்டு கராச்சியில் நடந்த இந்தியாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் அஜந்தா மென்டிஸ் 8 ஓவர்களில் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். கேரம் வகை சுழலில் மாயாஜாலம் காட்டிய இந்த பந்து வீச்சு தான் ஆசிய கிரிக்கெட்டில் சிறந்த பந்து வீச்சாக நீடிக்கிறது.
AFP
சிக்சர் விளாசிய ஹர்பஜன்சிங்
2010-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 268 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்கு கடைசி 2 பந்தில் 3 ரன் தேவைப்பட்ட போது முகமது அமிர் வீசிய 5-வது பந்தை ஹர்பஜன்சிங் சிக்சர் விளாசியது மறக்க முடியாத ஒரு தருணம்.
AFP
கோலியின் சிறந்த ஸ்கோர்
2012-ம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 330 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்து சாதனை படைத்தது. இதில் இந்திய வீரர் விராட் கோலி 183 ரன்கள் நொறுக்கினார். ஒரு நாள் போட்டியில் கோலியின் சிறந்த ஸ்கோர் இது தான்.
சச்சின் 100-வது சர்வதேச சதம்
இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் தனது 100-வது சர்வதேச சதத்தை நிறைவு செய்தது ஆசிய கோப்பை போட்டியில் தான். 2012-ம் ஆண்டு மிர்புரில் நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் தெண்டுல்கர் சதம் அடித்தும் (114 ரன்) இந்தியா தோற்றது கசப்பான விஷயம்.
AFP
திரில்லிங் வெற்றி
2014-ம் ஆண்டில் மிர்புரில் நடந்த இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 246 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணியில் கடைசி ஓவரில் சாகித் அப்ரிடி, சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினின் பந்து வீச்சில் அடுத்தடுத்து இரு சிக்சர் பறக்கவிட்டு தங்கள் அணிக்கு வெற்றி தேடித்தந்தது திரில்லிங்கான ஆட்டங்களில் ஒன்றாக பதிவானது.
அதிரடி பந்து வீச்சு
2016-ம் ஆண்டு 20 ஓவர் ஆசிய கிரிக்கெட்டில் இந்திய அணி, பாகிஸ்தானை 83 ரன்னில் சுருட்டி வெற்றி பெற்றதும், அந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிர் இந்தியாவின் டாப்-3 பேட்ஸ்மேன்களை ஒரே மாதிரி எல்.பி.டபிள்யூ. செய்ததும் திகைப்பூட்டுவதாக அமைந்தது.
‘டை’யில் முடிந்த ஆட்டம்
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் ‘டை’யில் முடிந்த ஒரே ஆட்டம் இந்தியா- ஆப்கானிஸ்தான் இடையிலான (2018-ம் ஆண்டு) மோதல் தான். அதில் ஆப்கானிஸ்தான் நிர்ணயித்த 253 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 49.5 ஓவர்களில் 252 ரன்னில் ஆல்-அவுட் ஆனதால் சமன் ஆனது.