குழந்தைகள் வெந்நீர் பருகுவதால் கிடைக்கும் பலன்கள்!

மழைக்காலம் தொடங்கியதும் குழந்தைகளுக்கு சாதாரண குடிநீருக்கு விடை கொடுத்துவிட்டு வெந்நீர் குடிப்பது நல்லது. ஏனெனில் வெந்நீர் மழைக்கால நோய்களான சளி, இருமல் பிரச்சினைகள் வராமல் தடுக்கும்.
தொண்டைக்கு இதமளிக்கும்

சூடான நீரை பருகும்போது சைனஸ் மற்றும் தொண்டை பகுதிகளை சூழ்ந்திருக்கும் சளி சவ்வுகளுக்கு இதமளிக்கும். மேலும் சளி கட்டிகளால் ஏற்படும் தொண்டை புண்ணை ஆற்றவும் உதவும்.

செரிமானத்திற்கு உதவும்

வெந்நீர் குடிப்பது செரிமான மண்டல செயல்பாடுகளை ஊக்குவிக்க உதவும். வயிறு மற்றும் குடல் வழியாக வெந்நீர் செல்லும்போது, உடல் கழிவுகளை அகற்றுவதற்கும் துணை புரியும்.

நரம்பு மண்டல செயல்பாட்டை மேம்படுத்தும்

போதுமான அளவு தண்ணீரோ, வெந்நீரோ, குளிர்ந்த நீரோ பருகாவிட்டால் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

மலச்சிக்கலை போக்கும்

மலச்சிக்கல் ஏற்படுவதற்கு நீரிழப்பும் முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. தொடர்ந்து வெந்நீர் பருகுவது குடல் இயக்கங்களை சீராக வைத்துக்கொள்ள உதவும். மலச்சிக்கல் பிரச்சனைக்கு நிவாரணம் தரும்.

நீரேற்றமாக வைத்திருக்கும்

வெந்நீரோ, தண்ணீரோ அதனை எந்த வெப்பநிலையில் பருகினாலும் உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும்.

குளிரில் நடுக்கம் குறையும்

குளிர்ச்சியான சூழலின் போது சூடான திரவங்களை பருகுவது உடல் நடுக்கத்தை குறைக்க உதவும். அந்த சமயத்தில் சூடான நீரை பருகுவது உடல் வெப்பநிலையை பராமரிப்பதற்கு உதவிடும்.

ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்

வெந்நீர் நரம்புகளை விரிவடைய செய்து ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். ரத்த அழுத்தம், இதய நோய் அபாயம் ஏற்படுவதை தடுக்கும்.

மிகவும் சூடாக இருக்கும் நீரை குடிப்பது உணவுக்குழாயில் உள்ள திசுக்களை சேதப்படுத்தலாம். நாக்கின் சுவை மொட்டுகளையும் பாதிக்கும்.

வெந்நீர் மற்றும் சூடான பானங்களை அருந்தும்போது, 130 முதல் 160 டிகிரி பாரன்ஹீட் வரையே வெப்பநிலை இருக்க வேண்டும்.