சென்னை பெசன்ட் நகர் எலியாட்ஸ் கடற்கரையில் சென்னை தின விழா கோலாகல கொண்டாட்டம்
1639-ம் ஆண்டு ஆகஸ்டு 22-ந்தேதி மெட்ராசாக உருவாகி 383-வது ஆண்டில் வீறு நடைபோடுகிறது நம்முடைய சென்னை.
அதன்படி, 20, 21-ந்தேதிகளில் 3.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை இந்த நிகழ்ச்சி நடந்தது.
இதை கொண்டாடும் வகையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் பெசன்ட்நகர் எலியட்ஸ் சாலையில் 2 நாட்கள் 'சென்னை திருவிழா' என்ற பெயரில் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
சென்னை தின விழா கொண்டாட்டத்தை அமைச்சர் பி. கே. சேகர்பாபு மாநகர மேயர் பிரியா மாநகராட்சி கமிஷனர் கக்கன்திப் சிங் பேடி போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆகியோர் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர்.
ஆங்காங்கே நம்ம சென்னை, நம்ம பெருமை என்ற வாசகத்துடன் பதாகைகளும் இடம்பெற்று இருந்தன.
நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் பிரத்யேகமாக மேடை ஒன்று அமைக்கப்பட்டு, நிமிடத்துக்கு நிமிடம் ஒரு நிகழ்ச்சி என்ற வகையில் களைகட்டியது. ஆரவாரத்துடன் சென்னைவாசிகள் சென்னை தினத்தை கோலாகலமாக கொண்டாடினர்.
உணவு கடைகள், கலை நிகழ்ச்சிகளுடன் இந்த சென்னை திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சாலை முழுவதும் வண்ண விளக்குகளால் ஜொலித்தது.
சிறுவர்களுக்கு விளையாட்டு நிகழ்ச்சிகளும், குடும்பத்தினருக்கு அறுசுவை உணவு வகைகளும் என சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு மகிழும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
சென்னை தினத்தையொட்டி சைக்கிள்களின் முக்கியத்துவத்தை பறைசாற்றும் வகையில் தமிழக அரசின் சுற்றுலாத்துறை மற்றும் சைக்கிளிங் யோகிஸ் அமைப்பு சார்பில் சென்னை தீவுத்திடலில் சைக்கிள் கண்காட்சி நடைபெற்றன.
தமிழ்நாடு பெண் போலீசாரின் பேக் பைபர் பேண்ட் இசைக் குழுவினர், இசை அமைத்து, எலியட்ஸ் சாலையில் ஒய்யாரமாக நடந்து வந்து அசத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியை ஒவ்வொரு ஆண்டும் நடத்தும் வகையில் திட்டமிட்டு இருப்பதாக அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.