சுவையான முருங்கைக்காய் கூட்டு செய்வது எப்படி!

முருங்கைக்காயை சாம்பார், புளிக்குழம்பில்தான் போடுவோம். ஆனால் முருங்கைக்காயை வைத்து கூட்டு வச்சு பாருங்க.. அதோட சுவையும் மணமும் சும்மா சுண்டியிழுக்கும்.
தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் - 5 பெரிய வெங்காயம் - 2 பூண்டு - 10 பல் பெரிய தக்காளி - 2 பச்சை மிளகாய் - 2 மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், சோம்பு, சீரகத்தூள் - தலா அரை டீஸ்பூன்.
தாளிக்க : எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் கடுகு, உ.பருப்பு - தலா 1 டீஸ்பூன் கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிது, தேங்காய்த் துருவல் - 6 டேபிள்ஸ்பூன்
செய்முறை : தேங்காயை கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். வெங்காயம், தக்காளியை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டி கொள்ளவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். முருங்கைக்காயை இரண்டு அல்லது மூன்று இஞ்ச் அளவுக்கு துண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
முதலில் வெங்காயம், பூண்டை மிக்சியில் போட்டு கொர கொரப்பாக அரைத்து தனியாக வைக்கவும். அடுத்து அதில் தக்காளியையும் இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும்.
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உ.பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் அடுத்து அரைத்த வெங்காயம், பூண்டு, போட்டு நன்றாக வதக்கவும்..
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அடுத்து தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து மூடி போட்டு சிறிது வதக்க வேண்டும். அடுத்து மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சோம்பு, சீரகத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
அடுத்து அதில் முருங்கைக்காய், சிறிது தண்ணீர் சேர்த்து உப்பும் சேர்த்து கொதிக்க விடவும். கொதி வந்தவுடன் கொர கொரப்பாக அரைத்த தேங்காயை சேர்க்கவும்.
இப்போது குக்கரை மூடி ஒரு விசில் விடவும். ஒரே விசில் தான் பக்குவமாக வெந்து விடும். அடுப்பை அணைக்கவும். வெந்ததும் மூடியை திறந்து கொத்தமல்லி தழை தூவி நன்றாக கிளறி இறக்கி பரிமாறவும்.சுவையான முருங்கைக்காய் கூட்டு தயார்.
Explore