மாணவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் சத்துணவு!

மாணவர்கள் கவனத்துடன் கல்வி கற்பதற்கும், தாங்கள் தேர்ந்தெடுத்த துறையில் வெற்றி பெறுவதற்கும், நினைவுத்திறன், புத்திக்கூர்மை, கவனம், சுறுசுறுப்பு ஆகியவை அதிகரிக்க சத்துள்ள உணவை சாப்பிட வேண்டும்.
மூளையின் செயல்திறனை அதிகரிப்பதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலம், போலிக் அமிலம், கால்சியம் ஆகியவை முக்கிய பங்காற்றுகின்றன.
மீன் மற்றும் கடல் உணவுகள், கோழி இறைச்சி, முட்டை, குடைமிளகாய், கேரட், வெள்ளரிக்காய், வெந்தயக்கீரை போன்ற உணவுகளில் இந்த சத்துக்கள் அதிகமாக உள்ளன.
மூளையில் புதிய செல்கள் உற்பத்தி ஆவதற்கும், மூளை சுறுசுறுப்பாக இயங்குவதற்கும், புரதச்சத்தும், கொழுப்புச்சத்தும் அவசியமானவை.
பருப்பு வகைகள், நிலக்கடலை, தேங்காய், பாதாம், வால்நட், சூரியகாந்தி விதை, மீன், முட்டை, இறைச்சி ஆகியவற்றில் புரதம் நிறைந்துள்ளது.
மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த மெக்னீசியம், காப்பர், அயோடின், இரும்புச்சத்து, செலினியம், மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற தாதுக்களும், வைட்டமின் பி, சி போன்ற சத்துக்களும் தேவை.
பீட்ரூட், குடைமிளகாய், பசலைக்கீரை, முருங்கைக்கீரை, சிவப்பரிசி, வாழைப்பழம், காலிபிளவர், சுரைக்காய், புடலங்காய், பீர்க்கங்காய் போன்ற உணவுகளில் இந்த சத்துக்கள் அதிகமாக உள்ளன.
மூளை, 75 சதவீதம் தண்ணீரால் ஆனது. இதுவே மூளை சுறுசுறுப்பாக இயங்குவதற்கு முக்கிய காரணமாகும். எனவே தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
உடல்சூடு மூளையை விரைவாக சோர்வடையச் செய்யும். எண்ணெய்யில் பொரித்த மற்றும் வறுத்த உணவுகளைத் தவிர்த்து, வேகவைத்த உணவுகள் மற்றும் பயறு வகைகளை தினமும் சாப்பிட வேண்டும்.