பெருந்தலைவர் காமராஜர் - ஓர் எளிய வரலாற்றுக் குறிப்பு...!
விருதுநகரில் குமாரசாமி நாடார் - சிவகாமி அம்மாள் தம்பதிக்கு 1903 ஜூலை 15 அன்று மகனாகப் பிறந்தவர் காமராஜர்.
தன் முழு நேரத்தையும் நாட்டுப் பணிக்கு அர்ப்பணிப்பதற்காக திருமணம் செய்து கொள்ளவும் மறுத்தவர். அதோடு எளிய தொண்டனாக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டு, 1954 முதல் 1963 வரை முதலமைச்சராக இருந்தார். பள்ளிகளில் இலவச மதிய உணவுத் திட்டம் மற்றும் மாணவர்களுக்கு 11-ம் வகுப்பு வரை இலவசக் கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
ஆழியாறு,பரம்பிக்குளம், மணிமுத்தாறு, வைகை என பல அணைக்கட்டுகள் கட்டிப் பாசன வசதி செய்து விவசாயம் செழிக்கச் செய்தார்.
1936-ல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி செயலராகவும், 1937-ல் எம்.எல்.ஏ.வாகவும், 1940 முதல் 1954 வரை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராகவும் இருந்துள்ளார்.
நாட்டு விடுதலைக்காக 9 ஆண்டுகள் சிறையிலிருந்தார்.1964-ல் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார்.
காமராஜர் 1972-ல் தாமிர பத்திர விருதும், 1976-ல் பாரத ரத்னா விருதும் பெற்றுள்ளார். காந்தியடிகளின் பிறந்தநாளான அக்டோபர் 2-ம் நாளில் 1975-ல் காமராஜர் மறைந்தார்.