சீறிப்பாய்ந்த காளைகளுடன் மல்லுக்கட்டிய வீரர்களின் புகைப்படங்கள்!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு, மதுரையில் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

பொங்கல் பண்டிகையையொட்டி முதல் நாள் (14.01.2025) அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தன. இதில் 1,100 காளைகள் பங்கேற்றன. 900 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.

இதில், 19 காளைகளை அடக்கிய கார்த்தி என்பவருக்கு முதல் பரிசாக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் கார் மற்றும் கன்றுடன் கூடிய கறவை பசு பரிசாக வழங்கப்பட்டன.

தொடர்ந்து, இரண்டாம் நாள்(15.01.2025) மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 1,100 காளைகள் பங்கேற்றன. 910 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.

14 காளைகளை பிடித்து, அதிக காளைகள் அடக்கிய நத்தம் பகுதியை சேர்ந்த பார்த்திபனுக்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது.

இந்நிலையில், மூன்றாம் நாள் (16.01.2025) உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதில் 1,100 காளைகள் மற்றும் 900 வீரர்களுடன் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடர்ந்து பல சுற்றுகளாக விறுவிறுப்பாக நடந்தது.

இந்த போட்டியை காண்பதற்காக உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் கூட வந்திருந்து ஜல்லிக்கட்டை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

இந்த போட்டியில் பூவந்தியை சேர்ந்த மாடுபிடி வீரர் அபிசித்தர் 20 காளைகளை பிடித்து முதல் பரிசை வென்றார். அவருக்கு கார் மற்றும் கன்றுடன் பசு ஆகியவை பரிசாக வழங்கப்பட்டன.