இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் எண்ணற்ற சாதனைகளை படைத்துவிட்டு, மரணத்தை தழுவி இருக்கிறார். சாதனைகளின் மறுபக்கமாக அவர் விளங்கி இருக்கிறார்.
ராணி இரண்டாம் எலிசபெத் உலகளவில் மிக நீண்டகாலம் ஆட்சி நடத்தி சாதனை படைத்திருக்கிறார். அவர் 1952-ம் ஆண்டு பிப்ரவரி 6-ந் தேதி தொடங்கி 2022 செப்டம்பர் 8-ந் தேதி வரையில் 70 ஆண்டுகள், 214 நாட்கள் அரசாட்சி நடத்தி இருப்பது அபூர்வ சாதனை.
அரசியல் மாற்றங்கள்
உலகின் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த ராணியாக, ஆப்பிரிக்காவின் காலனித்துவ அகற்றம், இங்கிலாந்தின் அதிகாரப்பகிர்வு, ஐரோப்பிய ஒன்றியத்தை உருவாக்குதல் மற்றும் அதில் இருந்து வெளியேறுதல் என பல அரசியல் மாற்றங்களுக்கு தலைமை தாங்கி இருக்கிறார்.
பவள விழா
ராணி எலிசபெத் தனது வெள்ளிவிழா, பொன்விழா, வைர விழாக்களை 1977, 2002, 2012 ஆண்டுகளில் கண்டிருக்கிறார். 70 ஆண்டு காலம் அரசாட்சி நடத்தி பவள விழா கண்டது இவர் மட்டும்தான்.
பணக்கார மகாராணி
உலகின் மிகப்பெரிய பணக்கார மகாராணி இவர்தான் இவரது சொத்து மதிப்பு 370 மில்லியன் பவுண்ட், நமது பணமதிப்பில் சுமார் ரூ.3,441 கோடி ஆகும்.
காமன்வெல்த் நாடுகளின் தலைவராக அவரது முகம் 33 நாடுகளின் நாணயங்களில் இடம் பெற்றிருப்பது தனிப்பெரும் சாதனை.
ஒலிம்பிக்
ஒன்றுக்கு மேற்பட்ட கோடைகால ஒலிம்பிக் போட்டிகளை தொடங்கி வைத்து சாதனை படைத்திருக்கிறார். 1976-ல் மாண்டிரியால் ஒலிம்பிக் போட்டியையும், 2012-ல் லண்டன் ஒலிம்பிக் போட்டியையும் இவர்தான் தொடங்கி வைத்தார்.
திருமண வாழ்க்கை
இளவரசர் பிலிப்புடனான ராணி எலிசபெத்தின் திருமண வாழ்க்கை, பிலிப் மரணம் அடைகிற வரையில் 73 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்திருப்பது சாதனை.
இங்கிலாந்து மன்னராக சார்லஸ் மகுடம் சூட 70 வருடங்கள், 214 நாட்கள் காக்க வைத்ததும் ஒரு சாதனை.
வெளிநாடுகளுக்கு அடிக்கடி செல்வதில் ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால் அவரிடம் பாஸ்போர்ட் கிடையாது. எல்லோருக்கும் பாஸ்போர்ட் வழங்கியவர் அவர். ஓட்டுனர் உரிமமும் அவரிடம் கிடையாது.