மடிக்கணினி பராமரிப்புக்கு தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்..!

மடிக்கணினியை உபயோகிப்பதற்கு முன்பு அதன் திரை பகுதியை துடைப்பதற்கு மறக்கக்கூடாது. சாதாரண துணியை பயன்படுத்தி துடைக்கவும் கூடாது. மடிக்கணினியை துடைப்பதற்கென்றே பயன்பாட்டில் இருக்கும் துணிகளை பயன்படுத்துவதுதான் சரியானது.
கம்ப்யூட்டரை போல மடிக்கணினியை ‘ஆன்’ செய்த நிலையிலேயே நீண்ட நேரம் வைத்திருக்கவும் கூடாது. மடிக்கணினியை பயன்படுத்த தொடங்குவதற்கு முன்பு என்ன வேலை செய்யப்போகிறோம், எவ்வளவு நேரத்தில் முடிக்கப்போகிறோம் என்ற திட்டமிடல் அவசியம்.
மடிக்கணினி வைக்கப்பட்டிருக்கும் இடத்தை சுற்றியுள்ள பகுதி சுத்தமாக இருக்க வேண்டும். மடிக்கணினிக்கு சுத்தமான காற்று கிடைக்கிறதா என்பதையும் உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.
ஏனெனில் அதனை வைக்கும் இடத்தை சூழ்ந்து தூசு, அழுக்குகள் படிந்திருந்தால் அவற்றை மடிக்கணினியில் உள்ள மின் விசிறி உள்ளிழுத்துவிடும். இதனால் அதன் அடிப்பாகம் சூடாகும். பழுது ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.
மடிக்கணினியை மேஜையில் சமதள பரப்பில் வைத்து பயன்படுத்துவதுதான் சரியானது. மடிக்கணினி முன்பு நொறுக்குத்தீனிகளை வைத்து சாப்பிடுவது தவறான பழக்கம். அதன் தட்டச்சு பகுதியில் அவை படிந்து தூசுக்கள், அழுக்குகள் சேர்வதற்கு வழிவகுத்துவிடும்.
மடிக்கணினியில் ஆன்டி வைரஸ் அப்ளிகேஷனை நிறுவுவது முக்கியமானது. அது காலாவதியாகும் காலத்தை கவனத்தில் கொண்டு புதுப்பிக்கவும் மறக்கக் கூடாது. ஏனெனில் வைரஸ், மடிக்கணினியின் வேகத்தை குறைத்துவிடும்.
மடிக்கணினியை நீண்ட நேரம் தொடர்ந்து பயன்படுத்தாதீர்கள். பயன்பாட்டு நேரம் அதிகரித்தால் அதன் செயல்பாட்டு வேகம் குறைந்துவிடும். மடிக்கணினியும் சூடாகிவிடும். ஆயுளும் குறையக் கூடும்.
மடிக்கணினி சூடாவதை தவிர்க்க ‘கூலிங் பேட்’ பயன்படுத்தலாம். அது மடிக்கணினிக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும். அதிகம் சூடாகும் சூழலை அறவே தவிர்த்துவிடச் செய்யும்.