முதுகு வலியை தவிர்ப்பதற்கு தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!
ஒரு நாளின் பெரும்பகுதியை ஒரே நிலையில் அமர்ந்தபடியே உட்கார்ந்திருப்பது முதுகு வலியை உண்டாக்கும். பெரிய அளவில் உடல் அசைவு இல்லாமல் செயலற்ற தன்மையில் இருப்பது முதுகு தசைகளை பலவீனப்படுத்திவிடும்.
10 ஆண்டுக்கு மேல் பயன்பாட்டில் இருக்கும் மெத்தையை மாற்றிவிட வேண்டும். பொதுவாக மெத்தைகள் முதுகெலும்பு பகுதி வளைந்து கொடுக்கும் வகையிலும், அதன் ஆரோக்கியத்தை பேணும் வகையிலும் வடிவமைக்கப்படுகிறது.
உடல் எடையை சீராக பராமரிப்பது முதுகுவலியை தடுக்க உதவும். அதிக உடல் எடையுடன் இருப்பது முதுகெலும்பு மற்றும் தசைகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும்.
புகைப்பழக்கம் நுரையீரல் மற்றும் இதயத்திற்கு மட்டுமல்ல, எலும்புகளுக்கும், முதுகுத்தண்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. ஏனெனில் உடலில் கால்சியம் உறிஞ்சுதலை குறைத்து விடும். புதிய எலும்புகளின் வளர்ச்சியை தடுத்துவிடும்.
உடற்பயிற்சி செய்யும்போது தவறான உடல் அசைவை கையாள்வது முதுகு வலிக்கு வழிவகுக்கும். அதிக எடையை தூக்குவது, மோசமான தோரணையில் உடற் பயிற்சி செய்வது முதுகு வலி பாதிப்பை அதிகப்படுத்திவிடும்.
கால்சியம், வைட்டமின் டி மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை தொடர்ந்து உட்கொள்ளவில்லை என்றால், முதுகுவலி அபாயம் அதிகரிக்கக் கூடும்.
நீண்ட நேரம் ஹீல்ஸ் செருப்புகளை அணிவது பெண்களுக்கு முதுகு மற்றும் கால் வலியை ஏற்படுத்தும். அவை கால்கள் மற்றும் முதுகுத்தண்டு பகுதிகளில் அழுத்தத்தை தரும்.
தோளில் அதிக எடை கொண்ட பொருட்களை சுமப்பது தோள்பட்டை, கழுத்து மற்றும் முதுகில் வலியை ஏற்படுத்தும்.