மழைக்காலத்தில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய நீர்வீழ்ச்சிகள்!

மழை தீவிரமடைய தொடங்கிவிட்டாலே நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து வழிந்தோடும். மழைக்காலத்தில் தவறாமல் நேரில் சென்று பார்வையிட வேண்டிய சில நீர்வீழ்ச்சிகளின் தொகுப்பு இது
ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி: தர்மபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி பருவ மழை காலங்களில் பார்வையிட ஏற்ற சுற்றுலாத்தலமாகும். இங்கு குளிர் காலம் மற்றும் பருவ மழை காலங்களில் படகு சவாரி விமரிசையாக நடைபெறும்.
சித்ரகோட் நீர்வீழ்ச்சி: சத்தீஸ்கரின் பஸ்தர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி, 90 அடி உயரத்தில் இருந்து விழும் இந்த நீர்வீழ்ச்சி 30 மீட்டர் அகலத்தில் பரந்து விரிந்து காட்சி அளிக்கும். அதனால் இது, 'இந்தியாவின் நயாகரா நீர்வீழ்ச்சி' என்று போற்றப்படுகிறது.
குடை நீர்வீழ்ச்சி: இது மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 500 அடி உயரத்தில் இருந்து குடை போன்ற தோற்றத்தில் தண்ணீர் வெளியேறுவதால் இது குடை நீர்வீழ்ச்சி என்று அழைக்கப் படுகிறது. நீர்வீழ்ச்சிக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள், அருவிக்கு கீழே உள்ள நடைபாதையில் நின்று அதன் அழகை ரசிக்கலாம்.
ஜோக் நீர்வீழ்ச்சி: கர்நாடகாவின் ஷிமோகா மாவட்டத்தில் அமைந்துள்ள ஜோக் நீர்வீழ்ச்சி இந்தியாவின் மிக உயரமான நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகும். 829 அடி உயரத்தில் இருந்து ராஜா, ராணி, ரோவர் மற்றும் ராக்கெட் என நான்கு அருவிகளாக சீறி தரைத்தளத்தை எட்டும் காட்சி மெய் சிலிர்க்கவைக்கும்.
தலகோனா நீர்வீழ்ச்சி: ஆந்திராவில் உள்ள தலகோனா நீர்வீழ்ச்சிக்கு 270 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் சீறி பாய்ந்து வருகிறது. இந்த நீர்வீழ்ச்சி ஆந்திராவில் உள்ள நீர்வீழ்ச்சிகளில் மிக உயரமானது. அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் பசுமை சூழலில் இந்த நீர்வீழ்ச்சியை சென்றடையும் அனுபவம் அலாதியானது.
அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி: கேரளாவின் திருச்சூரில் உள்ள சாலக்குடி ஆற்றில் இருந்து உருவான அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் 80 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் விழுகிறது. இந்த நீர்வீழ்ச்சியின் இருபுறமும் சூழ்ந்திருக்கும் பசுமையான காடுகள் ரசிக்கக்கூடியவை.
துத்சாகர் நீர்வீழ்ச்சி: கோவா செல்லும் வழியில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் இந்த நீர்வீழ்ச்சி, நாட்டின் மிக அழகான, உயரமான நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகும். பால் கடல் என வர்ணிக்கப்படும் இந்த நீர் வீழ்ச்சியின் அழகை ரசிப்பதற்கு ரெயில் பயணம் சிறந்த வழித்தட மாகும்.
நோகலிகை நீர்வீழ்ச்சி: மேகாலயாவின் சிரபுஞ்சிக்கு மிக அருகில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி, இந்தியாவின் மிக உயரமான நீர்விழ்ச்சிகளில் ஒன்றாகும். இதன் உயரம் 1,115 அடி ஆகும்.