அந்த மனசுதாங்க கடவுள்..! இன்று உலக முதலுதவி தினம்


அந்த மனசுதாங்க கடவுள்..! இன்று உலக முதலுதவி தினம்
x
தினத்தந்தி 14 Sep 2024 12:30 AM GMT (Updated: 14 Sep 2024 12:30 AM GMT)

சி.பி.ஆர்., காயங்களுக்கு சிகிச்சையளிப்பது போன்ற எளிய பயிற்சிகள், உயிர்களைக் காப்பாற்றவும், காயங்கள் மோசமடைவதை தடுக்கவும் உதவும்.

உயிர்களைக் காப்பாற்றுவதில் முதலுதவியின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதற்காக ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் இரண்டாவது சனிக்கிழமையன்று உலக முதலுதவி தினம் கொண்டாடப்படுகிறது. முதலுதவியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், உயிர்களைக் காப்பாற்றுவதற்கான அத்தியாவசிய பயற்சிகளுடன் தனிநபர்களை தயார்படுத்துவதையும் இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது. அவ்வகையில் இந்த ஆண்டு உலக முதலுதவி தினம் இன்று (14.9.2024) கொண்டாடப்படுகிறது.

சி.பி.ஆர்., காயங்களுக்கு சிகிச்சையளிப்பது போன்ற எளிய பயிற்சிகள், உயிர்களைக் காப்பாற்றவும், காயங்கள் மோசமடைவதை தடுக்கவும் உதவும். எனவே, உலக முதலுதவி தினமான இன்றையதினம், மக்களுக்கு அடிப்படை முதலுதவி தொடர்பான திறன்களை கற்றுக்கொடுத்தல் மற்றும் அவசர சூழ்நிலைகளில் அவர்களின் முக்கிய பங்கு பற்றி விளக்குவதற்காக பல்வேறு அமைப்புகள் சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதன்மூலம், முதலுதவி குறித்த புரிதல் மற்றும் போதுமான திறனை பெறும் நபர்கள், அவசர சூழ்நிலைகளில் தயக்கமின்றி முதலுதவி செய்யமுடியும். அவர்களுக்கும் ஆபத்து காலங்களில் கைகொடுக்கும்.

முதலுதவி செய்வதற்கும் ஒரு மனசு வேண்டும். மனித நேயம், சமூக அக்கறை, சக உயிரினத்திடம் அன்பு செலுத்துதல் மற்றும் இரக்க குணம் கொண்டவர்கள்தான் தாமாக முன்வந்து உதவி செய்வார்கள். அவர்களை ஊக்கப்படுத்தும் நாளாகவும் இந்த நாளை அமைகிறது.

இந்த நாளில், பொதுவான முதலுதவிகள் பற்றி அறிந்துகொள்வோம்:

வெட்டுக்கள் மற்றும் கீறல்கள் ஏற்பட்டால் வெட்டுபட்ட இடத்தை தண்ணீரால் சுத்தம் செய்து, அதை சுத்தமாக வைத்திருக்க ஒரு கட்டுபோடவேண்டும்.

தீக்காயங்கள் ஏற்பட்டால் நன்றாக தண்ணீரை ஊற்றி குளிர்விக்கவேண்டும். ஓடும் நீரில் குளிர்விப்பது நல்ல பலனை தரும். நன்கு குளிர்வித்து சுத்தமான துணியால் மூடவேண்டும். அதன்பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லவேண்டும்.

சுவாசம் நின்றுவிட்டால் மார்பை அழுத்தி மீண்டும் சுவாசத்தை மீட்டெடுக்கும் சி.பி.ஆர். முதலுதவி உதவுகிறது. இதுபற்றி நன்கு தெரிந்துகொண்டு முதலுதவி செய்வது நல்லது.

எலும்புகள் உடைந்திருந்தால் அவசரப்பட்டு அவர்களை தூக்காமல், காயம்பட்ட பகுதியில் மேலும் பாதிப்பு ஏற்படாத வகையில் மெதுவாக இரண்டு மூன்று பேர் சேர்ந்து தூக்கி ஸ்டிரெச்சரில் வைத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். காயமடைந்த பகுதியை அசையாமல் வைக்கவேண்டும். தேவைப்பட்டால் ஸ்பிளிண்ட் பயன்படுத்தலாம்.

சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது விபத்தில் யாருக்கேனும் அடிபட்டிருந்தால் உடனே தயங்காமல் முதலுதவி செய்ய வேண்டும். காயம்பட்ட இடத்தில் ரத்தம் வெளியேறினால், துணியால் அழுத்தி பிடிக்கலாம். காயம் தீவிரமாக இருந்தால், உடனடியாக அவசர சேவையை அழைக்கவேண்டும்.


Next Story