ஐ.பி.எல். மினி ஏலம்: இறுதி பட்டியல் வெளியீடு.. எத்தனை வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள் தெரியுமா..?

இந்த ஏலத்தில் பங்கேற்க ஆரம்பத்தில் 1,390 வீரர்கள் பதிவு செய்திருந்தனர்.
சென்னை,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் வருகிற 16-ந் தேதி அபுதாபியில் நடக்கிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் வீரர்கள் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை கடந்த நவம்பர் 15-ந் தேதி இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 10 அணிகளும் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது.
அதன்படி ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் விடுவித்த வீரர்கள் மற்றும் தக்கவைத்த வீரர்கள் விவரம் அதிகாரபூர்வமாக வெளியிட்டன. மொத்தம் 173 வீரர்கள் தக்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த ஐ.பி.எல். ஏலத்தில் பங்கேற்க ஆரம்பத்தில் 1,390 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். ஆனால், 10 ஐ.பி.எல் அணி நிர்வாகங்களுடன் கலந்தாலோசித்த பிறகு, பி.சி.சி.ஐ. இந்தப் பட்டியலை வெகுவாகக் குறைத்துள்ளது. அதன்படி 1040 வீரர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு இறுதியாக 350 வீரர்கள் மட்டுமே ஏலப்பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். இவர்களிலிருந்துதான் அணிகள் தங்களுக்குத் தேவையான வீரர்களைத் தேர்வு செய்ய உள்ளன.
இந்த இறுதி பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் குயின்டன் டி காக் சேர்க்கப்பட்டுள்ளார். ஆரம்பகட்ட பட்டியலில் டி காக் பெயர் இடம்பெறவில்லை. ஆனால், சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில், சதம் அடித்து மிரட்டினார். இதையடுத்து, ஐபிஎல் அணி ஒன்று டி காக்கை ஏலத்தில் சேர்க்க வேண்டும் என்று பிசிசிஐ-யிடம் கோரிக்கை விடுத்தது. இதன் காரணமாக, விக்கெட் கீப்பர் பிரிவில் அவர் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளார். இவரது அடிப்படை விலை ரூ.1 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை ரூ.2 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இவரை வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் 238 அன்கேப்டு வீரர்கள் (சர்வதேச போட்டிகளில் விளையாடாத வீரர்கள்) இடம்பெற்றுள்ளனர். அதில் இந்தியாவிலிருந்து 224 பேரும், வெளிநாடுகளில் இருந்து 14 பேரும் இடம்பெற்றுள்ளனர்.
வெளிநாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்பட்ட 31 இடங்கள் உட்பட, மொத்தம் 77 வீரர்களை அணிகள் தேர்ந்தெடுக்க இந்த ஏலத்தில் போட்டியிடுவார்கள்.
இந்த ஏலம் டிசம்பர் 16-ம் தேதி அபுதாபியில் இந்திய நேரப்படி பிற்பகல் 2:30 மணிக்கு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.






