விமர்சித்த ஐ.பி.எல். அணியின் உரிமையாளர்.. பதிலடி கொடுத்த கம்பீர்.. என்ன நடந்தது..?


விமர்சித்த ஐ.பி.எல். அணியின் உரிமையாளர்.. பதிலடி கொடுத்த கம்பீர்.. என்ன நடந்தது..?
x

image courtesy:PTI

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த இந்தியா ஒருநாள் தொடரை கைப்பற்றியது.

விசாகப்பட்டினம்,

இந்தியா - தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரின் 3-வது மற்றும் கடைசி போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்தது. இதில் டாஸ் ஜெயித்த இந்திய அணியின் கேப்டன் கே.எல். ராகுல் பீல்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 47.5 ஓவர்களில் 270 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக டி காக் 106 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதைத்தொடர்ந்து 271 ரன் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் கண்ட ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா நல்ல அடித்தளம் அமைத்தனர். 61-வது அரைசதம் அடித்த ரோகித் சர்மா 75 ரன்னில் அவுட்டானார். அடுத்து களம் புகுந்த விராட் கோலி நாலாபுறமும் பந்தை விரட்டியடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினார். அபாரமாக ஆடிய ஜெய்ஸ்வால் 111 பந்துகளில் தனது கன்னி சதத்தை பூர்த்தி செய்தார்.

வெறும் 39.5 ஓவர்களில் இந்திய அணி ஒரு விக்கெட்டுக்கு 271 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஜெய்ஸ்வால் 116 ரன்களுடனும், விராட் கோலி 65 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஜெய்ஸ்வால் ஆட்ட நாயகன் விருதும், விராட் கோலி தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதலாவது ஆட்டத்தில் இந்தியாவும், 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவும் வென்று இருந்தன. அத்துடன் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் (0-2) கண்ட தோல்விக்கு இந்தியா பதிலடி கொடுத்தது.

முன்னதாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஒயிட்வாஷ் ஆனதால் பலரும் தலைமை பயிற்சியாளர் ஆன கவுதம் கம்பீரை கடுமையாக விமர்சித்தனர். கடந்த ஆண்டு நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் 0-3 என்ற கணக்கில் முதல்முறையாக பறிகொடுத்தது. உள்நாட்டில் அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்தியா டெஸ்ட் தொடரை தாரைவார்த்தது கடந்த 40 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும்.

இதனால் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கடும் விமர்சனத்துக்குள்ளானார். அவரை நீக்க வேண்டும். பரீட்சார்த்த முயற்சி என்ற பெயரில் அணியை சீரழித்துக் கொண்டிருக்கிறார் என சமூக வலைதளத்தில் ரசிகர்கள் தங்களது குமுறலை கொட்டி தீர்த்தனர்.

அந்த வரிசையில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் இணை உரிமையாளர் பார்த் ஜிண்டால், ‘இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் தனி பயிற்சியாளரை நியமிக்க வேண்டிய நேரம்” என்று கம்பீரை விமர்சித்தார்.

இந்நிலையில் பார்த் ஜிண்டாலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்றைய போட்டியின் முடிவில் கவுதம் கம்பீர் சில கருத்துகளை கூறியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், “கிரிக்கெட்டுடன் எந்த தொடர்பும் இல்லாதவர்கள் சில விஷயங்களைச் சொன்னார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தனி பயிற்சியாளர் தேவை என ஒரு ஐபிஎல் அணியின் உரிமையாளர் கூறியுள்ளார் (பார்த் ஜிண்டால்). இது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. மக்கள் தங்கள் வரம்புக்குள் இருப்பது முக்கியம். நாங்கள் அவர்களின் வரம்புக்குள் செல்ல மாட்டோம். எனவே, நாங்கள் செய்வதில் தலையிட அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை" என்று கூறினார்.

1 More update

Next Story