ரஜத் படிதார் மிரட்டல் பேட்டிங்.. குஜராத் அணிக்கு 255 ரன்கள் வெற்றி இலக்கு

20 ஓவர்களில் பெங்களுரு அணி 5 விக்கெட்டுகளை இழந்து 254 ரன்கள் எடுத்தது.
ரஜத் படிதார் மிரட்டல் பேட்டிங்.. குஜராத் அணிக்கு 255 ரன்கள் வெற்றி இலக்கு
Published on

தர்மசாலா,

19-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இறுதிக்கட்டத்துக்கு வந்துவிட்டது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (18 புள்ளி), குஜராத் டைட்டன்ஸ் (18), ஐதராபாத் சன்ரைசர்ஸ் (18), ராஜஸ்தான் ராயல்ஸ் (16) ஆகிய அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

இந்த நிலையில் புள்ளிபட்டியலில் டாப்-2 இடங்களை பெற்ற அணிகளான நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும், 2022-ம் ஆண்டு சாம்பியனான குஜராத் டைட்டன்சும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் மோதி வருகின்றன.

இமாசலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் இந்த ஆட்டம் தொடங்கியது. அதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலாவதாக களமிறங்கிய பெங்களூரு அணியில் விராட் கோலி மற்றும் வெங்கடேஷ் ஐயர் களமிறங்கினர்.

அதிரடியாக ரன்கள் குவிக்கத்தொடங்கிய இந்த ஜோடியால் அணியின் ரன்ரேட் ஜெட் வேகத்தில் எகிறியது. இந்த ஜோடியில் வெங்கடேஷ் ஐயர் 19 (7) ரன்களில் கேட்ச் ஆனார். அவரைத்தொடர்ந்து அரை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 43 (25) ரன்களில் போல்ட் ஆனார். அடுத்து களமிறங்கிய தேவ்தத் பட்டிக்கல் 30 (19) ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக கேப்டன் ரஜத் படிதார் மற்றும் குர்ணால் பாண்ட்யா ஜோடி சேர்ந்தனர். அதிரடியாக ரன்கள் குவித்த இந்த ஜோடியில் குர்ணால் பாண்ட்யா 43 (28) ரன்களில் கேட்ச் ஆனார். மறுமுனையில் வாணவேடிக்கை காட்டிய ரஜத் படிதார் 21 பந்துகளில் தனது அரை சதத்தை பதிவு செய்தார். அடுத்து களமிறங்கிய டிம் டேவிட் 4 (5) ரன்னில் வெளியேறினார்.

இறுதியில் தொடர்ந்து பேட்டிங்கில் மிரட்டிய ரஜத் படிதார் 93 (33) ரன்களும், ஜிதேஷ் சர்மா 15 (5) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 254 ரன்கள் எடுத்தது. குஜராத் அணியின் சார்பில் அதிகபட்சமாக ரபடா, ஹோல்டர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், பிரசித் கிருஷ்ணா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 255 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் குஜராத் அணி களமிறங்க உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com