புதிய தேசிய சாதனை படைத்த நீளம் தாண்டுதல் வீரர் ஸ்ரீசங்கர், 100 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீராங்கனை அசத்தல்


புதிய தேசிய சாதனை படைத்த நீளம் தாண்டுதல் வீரர் ஸ்ரீசங்கர், 100 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீராங்கனை அசத்தல்
x
தினத்தந்தி 17 March 2021 4:38 AM GMT (Updated: 17 March 2021 4:38 AM GMT)

புதிய தேசிய சாதனை படைத்த நீளம் தாண்டுதல் வீரர் ஸ்ரீசங்கர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி 100 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீராங்கனை அசத்தல்.

பாட்டியாலா, 

24-வது பெடரேஷன் கோப்பைக்கான தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று நடந்த ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் 21 வயது கேரள வீரர் எம்.ஸ்ரீசங்கர் தனது 5-வது முயற்சியில் 8.26 மீட்டர் தூரம் தாண்டி புதிய தேசிய சாதனை படைத்து தங்கப்பதக்கம் வென்றார். இதற்கு முன்பு 2018-ம் ஆண்டில் அவர் 8.20 மீட்டர் தூரம் தாண்டியதே தேசிய சாதனையாக இருந்தது. அவர் தனது சொந்த சாதனையை தகர்த்ததுடன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார். ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி இலக்கு 8.22 மீட்டராகும். தடகளத்தில் தனிநபர் பிரிவில் டோக்கியோ ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்றுள்ள 9-வது இந்தியர் ஸ்ரீசங்கர் ஆவார்.

100 மீட்டர் ஓட்டத்தில் பஞ்சாப் வீரர் குரிந்தர்விர் சிங் (10.32 வினாடி) தங்கப்பதக்கமும், தமிழகத்தை சேர்ந்த இலக்கிய தாசன் (10.43 வினாடி) வெள்ளிப்பதக்கமும், மராட்டியத்தின் சதீஷ் கிருஷ்ணகுமார் (10.56 வினாடி) வெண்கலப்பதக்கமும் கைப்பற்றினார்கள். தேசிய சாதனையாளரான ஒடிசாவை சேர்ந்த அமியா குமார் மாலிக் (10.75 வினாடி) 7-வது இடமே பெற்றார்.

பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை தனலட்சுமி (11.39 வினாடி) தேசிய சாதனையாளரான ஒடிசாவை சேர்ந்த டூட்டி சந்தை (11.58 வினாடி) 2-வது இடத்துக்கு தள்ளி தங்கப்பதக்கத்தை தனதாக்கி அசத்தினார். உள்ளூரில் 2015-ம் ஆண்டுக்கு பிறகு டூட்டி சந்த் தங்கப்பதக்கத்தை தவறவிடுவது இதுவே முதல்முறையாகும். மற்றொரு தமிழக வீராங்கனை அர்ச்சனா சுசீந்திரன் (11.76 வினாடி) வெண்கலப்பதக்கம் வென்றார். அசாமை சேர்ந்த நட்சத்திர வீராங்கனை ஹிமா தாஸ் தவறான தொடக்கம் காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்தியாவின் அதிவேக வீராங்கனையாக உருவெடுத்துள்ள 22 வயதான தனலட்சுமி திருச்சியை சேர்ந்தவர் ஆவார்.

400 மீட்டர் ஓட்டத்தில் கர்நாடக வீராங்கனை பூவம்மா (53.57 வினாடி) தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். தமிழக வீராங்கனை சுபா வெங்கடேசன் வெள்ளிப்பதக்கமும், கிரண் பாஹல் (அரியானா) வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.

Next Story