உலக இளையோர் குத்துச்சண்டை: 8 இந்தியர்கள் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்


உலக இளையோர் குத்துச்சண்டை: 8 இந்தியர்கள் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
x
தினத்தந்தி 22 April 2021 3:09 AM GMT (Updated: 22 April 2021 3:09 AM GMT)

உலக இளையோர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி போலந்து நாட்டில் நடந்து வருகிறது.

புதுடெல்லி, 

இதில் பெண்களுக்கான 48 கிலோ உடல் எடைப்பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீராங்கனை ஜித்திகா 5-0 என்ற கணக்கில் இத்தாலியின் எரிகா பிரிஸ்சியான்டாரோவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதேபோல் இந்திய வீராங்கனைகள் பேபிரோஜிசனா சானு (51 கிலோ), வின்கா (60 கிலோ), அருந்ததி சவுத்ரி (69 கிலோ), பூனம் (57 கிலோ), தோக்சோம் சனமச்சா சானு (75 கிலோ), அல்பியா பதான் (81 கிலோ) ஆகியோரும் தங்களது அரைஇறுதி தடையை தாண்டி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தனர்.

ஆண்களுக்கான 56 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீரர் சச்சின் 5-0 என்ற கணக்கில் ஐரோப்பிய முன்னாள் ஜூனியர் சாம்பியனான மைக்கேல் பால்டாசியை (இத்தாலி) பந்தாடி இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தார். மொத்தம் 8 இந்தியர்கள் இறுதி சுற்றை எட்டியிருப்பதால் தங்கம் அல்லது வெள்ளிப்பதக்கம் உறுதியாகி இருக்கிறது.

மற்ற இந்திய வீரர்களான பிஷ்வாமித்ரா சோங்தோம் (49 கிலோ), அங்கித் நார்வால் (64 கிலோ), விஷால் குப்தா (91 கிலோ) ஆகியோர் தங்களது அரைஇறுதி பந்தயங்களில் தோல்வி கண்டு வெண்கலப்பதக்கத்துடன் திருப்தி கண்டனர். 2018-ம் ஆண்டு ஹங்கேரியில் நடந்த உலக இளையோர் குத்துச்சண்டை போட்டியில் 10 பதக்கம் வென்றதே இந்தியாவின் சிறந்த செயல்பாடாகும். அதனை இந்த முறை முந்திவிட்டது.

Next Story