காற்றில் மிதக்கும் திடப்பொருள்


காற்றில் மிதக்கும் திடப்பொருள்
x

ஏரோஜெல்லில் திரவப்பகுதிக்குப் பதிலாக வாயு மூலக்கூறுகளே அதிகளவில் காணப்படுகின்றன.

காற்றை விட எடை குறைவான திடப்பொருள் உண்டு என்றால் உங்களால் நம்பமுடிகிறதா?

`கிராபீன் ஏரோஜெல்' என்ற திடப்பொருள் உலகின் மிக இலகுவான ஒன்றாக கருதப்படுகிறது. ஜெல் போன்ற பொருட்களில், திட மற்றும் திரவ நிலையில் அதன் முலக்கூறுகள் காணப்படும். ஆனால் ஏரோஜெல்லில் திரவப்பகுதிக்குப் பதிலாக வாயு மூலக்கூறுகளே அதிகளவில் காணப்படுகின்றன. திட மற்றும் வாயு நிலை மூலக்கூறுகளால் உருவாக்கப்படுவதே 'ஏரோஜெல்' எனப்படும். இதனை சாமுவேல் ஸ்டீபன் கிஸ்ட்லர் என்பவர் 1931-ம் ஆண்டு கண்டுபிடித்தார். கிராபீன் ஏரோஜெல்கள் மிகவும் மீள்தன்மை கொண்டவை. இதை எந்த வடிவத்திற்கு மாற்றினாலும் மீண்டும் அதன் பழைய வடிவத்தை கொண்டு வர முடியும். மேலும் குறைந்த அடர்த்தி கொண்டதாக இருப்பதால், அது தன் எடையை விட 850 மடங்குக்கு மேல் திரவப் பொருளை உறிஞ்சும் ஆற்றலைப் பெற்றது. இதனால் சுற்றுசூழலுக்கு ஆபத்தை விளைவிக்கும் எண்ணெய்க் கசிவை சுத்தப்படுத்துவதற்கு பயன்படுகிறது. இதனால் சுற்றுபுற தூய்மைக்கும் பெரும்பங்கு வகிக்கிறது. இவற்றின் நுண்ணிய அமைப்பு மிகவும் உறுதியாக இருப்பதால், இவை அதிகளவு எடையையும் தாங்கக் கூடியவை. 2 கிராம் எடையுள்ள ஏரோஜெல், 2.5 கிலோ கிராம் எடையுள்ள செங்கல்லை தாங்கும் சக்தியை பெற்றுள்ளது.

நாசா சமீபத்தில் வலுவூட்டப்பட்ட ஏரோஜெல்களை மேம்பட்ட ஸ்பேஸ்சூட் தயாரிப்புகளுக்கு பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளது. சூப்பர் கேபாசிட்டர்கள், லித்தியம்-அயன் பேட்டரிகள், சோலார் செல்கள் போன்ற பல தொழில்நுட்பங்களில் இதன் பயன்பாடு அதிகளவில் உள்ளது. பொதுவாக, குறைந்த எடை மற்றும் குறைந்த வெப்ப கடத்துத்திறன் காரணமாக ஏரோஜெல்கள் சிறந்த இன்சுலேட்டர்களாகவும் பயன்படுகின்றன. சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கிராபீன் ஏர்ஜெல்லை பயன்படுத்தி அதிக ஆற்றல் கொண்ட சூப்பர் பேட்டரிகளை உருவாக்க முடியும் என நம்புகின்றனர். பேராசிரியர்களான 'சர் ஆண்ட்ரே கீம்' மற்றும் 'சர் கோஸ்ட்யா நோவோசெலோவ்' ஆகியோர் இதன் ஆராய்ச்சிக்காக முதன்முதலில் இயற்பியலுக்கான நோபல் பரிசை பெற்றார்கள்.


Next Story