சா்வதேச நெல்சன் மண்டேலா தினம்


சா்வதேச நெல்சன் மண்டேலா தினம்
x

தங்களுக்கான சந்தர்ப்பங்களை உருவாக்குவது மட்டுமல்லாமல் உருவாகும் சந்தர்ப்பத்தை சாதகமாகப் பயன்படுத்துபவர்களையே உலக சரித்திரம் அதிகமாக நினைவில் வைத்திருக்கிறது.

முதல் கறுப்பின ஜனாதிபதி

நெல்சன் மண்டேலா 1918-ம் ஆண்டு ஜூலை 18-ந் தேதி, பிறந்தார். அவர் 1963-ம் ஆண்டு நிறவெறிக்கு எதிரான விடுதலை இயக்கத்தை வழிநடத்தியதற்காக சிறையில் அடைக்கப்பட்டார். 27 ஆண்டுகளுக்குப் பிறகு 1990-ல் சிறையிலிருந்து வெளியேறினார். மேலும் தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பின வழக்கறிஞர்களில் ஒருவர். 1994-ம் ஆண்டு நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு 1999 வரை ஜனாதிபதியாக பணியாற்றினார். தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதியும் ஆவார்.

நெல்சன் மண்டேலாவின் முதல் பெயர் உண்மையில் ரோலிஹ்லாலா, ஆனால் அவரது பள்ளி ஆசிரியர்களில் ஒருவரால் நெல்சன் என்று செல்லப்பெயர் சூட்டப்பட்டது. பல தென்னாப்பிரிக்கர்கள் மண்டேலாவை "கறுப்பு சூரியன்" மற்றும் "மடிபா" என்று அழைத்தனர்.

சர்வதேச நாளாக அறிவிப்பு

2009-ம் ஆண்டு நவம்பர் 10-ந் தேதி ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் நெல்சன் மண்டேலா சர்வதேச தினமாக ஜூலை 18-ந் தேதி நாளை (செவ்வாய்க்கிழமை) அனுசரிக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மக்கள் முன்னேற்றத்திற்காகவும் அமைதியை அடைவதற்காகவும் அவர் செய்த அனைத்து கடின உழைப்பு மற்றும் தியாகத்தை கவுரவிக்கும் வகையில், சர்வதேச மண்டேலா தினமாக 2009-ம் ஆண்டு ஜூலை 18-ந் தேதி சில குழுக்களால் தொடங்கப்பட்டது. ஐ.நா. வால் அனுசரிக்கப்பட்ட முதல் நெல்சன் மண்டேலா சர்வதேச தினம் 2010-ம் ஆண்டில் கொண்டாடப்பட்டது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு மண்டேலா தினமாக ஐக்கிய நாடுகள் சபையால் தேர்ந்தெடுக்கப்பட்டது.

ஜக்கிய நாடுகள் சபை முதன் முறையாக ஒரு மனிதனை கவுரவிக்கும் விதமாக சர்வதேச தினத்தை அறிவித்தது.

தினத்தின் நோக்கம்

1. "தைரியம் என்பது பயம் இல்லாதது அல்ல, அதன் மீதான வெற்றி என்பதை நான் கற்றுக்கொண்டேன். தைரியமானவன் பயப்படாதவன் அல்ல, அந்த பயத்தை வெல்பவனே.

.2. "எனது வெற்றிகளை வைத்து என்னை மதிப்பிடாதீர்கள், நான் எத்தனை முறை கீழே விழுந்து மீண்டும் எழுந்தேன் என்பதை வைத்து என்னை மதிப்பிடுங்கள்."

3. "உலகத்தை மாற்ற நீங்கள் பயன்படுத்தக்கூடிய மிக சக்திவாய்ந்த ஆயுதம் கல்வி."

4. "நான் ஒருபோதும் தோற்கவில்லை. நான் வெற்றி பெறுகிறேன் அல்லது கற்றுக்கொள்கிறேன்.

5. "மனிதனின் நற்குணம் மறைந்தாலும் அணையாத சுடர்."

இந்தாண்டுக்கான கருப்பொருள்

2022-ம் ஆண்டு நெல்சன் மண்டேலா சர்வதேச தினத்தின் கருப்பொருள் "நீங்கள் எங்கிருந்தாலும் உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள், உங்களிடம் இருப்பதைக் கொண்டு செய்யுங்கள்." இந்தாண்டுக்கான (2023-ம்) கருப்பொருள் "காலநிலை, உணவு மற்றும் ஒற்றுமை".

விருதுகள்

அமைதிக்கான நோபல்பரிசு, இந்தியாவின் பாரத ரத்னா மற்றும் நேரு சமாதான விருது உட்பட, உலக நாடுகளின் 250-க்கும் மேற்பட்ட உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார். மதிப்பிற்குரிய உலக தலைவர்களில் ஒருவரான இவர், 2013-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி தனது 95 வது வயதில் காலமானார்.

தனித்தலைவன்

நீ நிறவெறி நெருப்பைத் தனித்திட

தன்மானம் என்னும் தண்ணீரை ஊற்றித் தன்னையே தானம் செய்தாய்! உலகில் தன்னிகரற்ற தனித்தலைவன் நீ!

உலக வரலாற்றில் காந்தியடிகள்

எப்படி 'மகாத்மா' என்று மக்களால் மதிக்கப்பட்டாரோ!

அதே போல் நீயும் இன்னொரு மகாத்மா ஆகிவிட்டாய்!

"தியாகம்" என்ற சொல்லை

இன்று முதல் அகராதியிலிருந்து எடுத்துவிடுவோம்.........

அதனை 'நெல்சன் மண்டேலா' என்றே திருத்திக் கொள்வோம்!.


Next Story