ஊட்டி, கொடைக்கானல் செல்வோருக்கு இ - பாஸ் : சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு


ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7 ம்தேதி முதல் இ பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என, நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை

சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தன. இந்த வழக்கு தொடர்பாக நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்கள் காணொலி மூலம் ஆஜராகியிருந்தனர். அபோது, ஊட்டி, கொடைக்கானலுக்கு எத்தனை வாகனங்கள் செல்லலாம் என்பது குறித்து சென்னை ஐ.ஐ.டி. மற்றும் பெங்களூரு ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்கள் ஆய்வு செய்ய உள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அரசு தாக்கல் செய்த அறிக்கையில், ஊட்டிக்கு தினமும், ஆயிரத்து 300 வேன்கள் உள்பட 20 ஆயிரம் வாகனங்கள் வருகை தருவதாக தெரிவிக்கப்பட்டது. இத்தனை வாகனங்கள் சென்றால் நிலைமை மோசமாகும் எனவும், உள்ளூர் மக்கள் நடமாட இயலாது எனவும், சுற்றுச்சூழலும், விலங்குகளும் பாதிக்கப்படும் எனவும் குறிப்பிட்ட நீதிபதிகள், ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம். ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் வரை, இடைக்கால நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தனர்.

மேலும்,, கொரோனா காலத்தில் நடைமுறையில் பின்பற்றப்பட்ட இ – பாஸ் நடைமுறையை ஊட்டி, கொடைக்கானலில் மே 7 ம்தேதி முதல் ஜூன் 30 ம் தேதி வரை அமல்படுத்த வேண்டும் என, நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இ பாஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டும் அனுமதியளிக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், உள்ளூர் மக்களுக்கு விலக்களிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர். இ பாஸ் நடைமுறை குறித்து இந்திய அளவில் விரிவான விளம்பரங்களை கொடுக்க வேண்டும் எனவும், இ பாஸ் வழங்குவதற்கு தேவையான தகவல் தொழில்நுட்ப உதவிகளை தமிழக அரசு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூலை 5 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்


Next Story