பாண்ட்யாவுக்கு மட்டுமல்ல மொத்த மும்பை அணிக்கே அபராதம் விதித்த ஐ.பி.எல். நிர்வாகம்...காரணம் என்ன..?


பாண்ட்யாவுக்கு மட்டுமல்ல மொத்த மும்பை அணிக்கே அபராதம் விதித்த ஐ.பி.எல். நிர்வாகம்...காரணம் என்ன..?
x

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ - மும்பை அணிகள் மோதின.

லக்னோ,

17-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை - லக்னோ அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 144 ரன்கள் மட்டுமே எடுத்தது.

மும்பை தரப்பில் அதிகபட்சமாக நேஹல் வதேரா 46 ரன், டிம் டேவிட் 35 ரன் எடுத்தனர். லக்னோ தரப்பில் மோஷின் கான் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 145 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய லக்னோ அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 145 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியில் மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் 20 ஓவர்களை வீசி முடிக்கவில்லை. எனவே குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கத் தவறிய விதிமுறையை மீறிய மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு இந்த போட்டிக்கான சம்பளத்திலிருந்து ரூ. 24 லட்சம் அபராதமாக விதிக்கப்படுவதாக ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியிலும் மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை. அதனால் ஏற்கனவே பாண்ட்யாவுக்கு மட்டும் ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. தற்போது 2-வது முறையாக அந்தத் தவறை செய்துள்ளதால் பாண்ட்யாவுக்கு ரூ. 24 லட்சம் அபராதமும் இம்பேக்ட் வீரர் உள்ளிட்ட எஞ்சிய 11 மும்பை வீரர்களுக்கு தலா ரூ. 6 லட்சம் அபராதமும் விதிக்கப்படுவதாக ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது.


Next Story