தர்ஷன் ரசிகர்கள் எனக்கூறி நடிகர் பிரதமிடம் ஆயுதங்களை காட்டி கொலை மிரட்டல்

நடிகர் பிரதமுக்கு, தர்ஷனின் ரசிகர்கள் கொலை மிரட்டல் விடுத்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தர்ஷன் ரசிகர்கள் எனக்கூறி நடிகர் பிரதமிடம் ஆயுதங்களை காட்டி கொலை மிரட்டல்
Published on

பெங்களுரு,

பெங்களூரு அருகே தொட்டபள்ளாப்புராவில் நடிகர் தர்ஷனின் ரசிகர்கள் எனக்கூறி, நடிகர் பிரதமிடம் ஆயுதங்களை காட்டி கொலை மிரட்டல் விடுவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி புகார் அளித்தால் விசாரணை நடத்தப்படும் என போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.

கன்னட திரையுலகில் நடிகராக இருந்து வருபவர் பிரதம். இவர், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமாகி நடிகராகி உள்ளார். இதற்கு முன்பு நடிகர் தர்ஷனுக்கு எதிராக பிரதம் சில கருத்துகளை கூறி இருந்தார். இதனால் பிரதம் எதிராக தர்ஷன் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இந்த நிலையில், பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புராவில் உள்ள ரேணுகா எல்லம்மா கோவிலுக்கு பிரதம் சென்றிருந்தார்.

அப்போது அங்கு வந்த சிலர் பிரதமை சந்தித்து தாங்கள் நடிகர் தர்ஷனின் தீவிர ரசிகர்கள் என்று கூறிக் கொண்டுள்ளனர். பின்னர் பிரதமை சுற்றி வளைத்து நின்று கொண்ட அவர்கள், விருந்து நடந்த ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அவரை அழைத்து சென்றுள்ளனர். அங்கு வைத்து பிரதமிடம் ஆயுதங்களை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது பிரதம் நேற்று கூறினார்.

அந்த சந்தர்ப்பத்தில் நடிகர் புல்லட் பிரகாசின் மகன் ரக்சாக் புல்லட்டும் உடன் இருந்ததாக பிரதம் கூறி இருந்தார். மேலும் அவர்கள் பேசிய ஆடியோ ஒன்றும் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த விவகாரத்தில் தனது குடும்பத்தை இழுக்க வேண்டாம் என்றும், இந்த சம்பவத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தும் இல்லை என்று ரக்சாக் புல்லட்ட தெரிவித்துள்ளார். நடிகர் பிரதமுக்கு, தர்ஷனின் ரசிகர்கள் கொலை மிரட்டல் விடுத்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி பெங்களூரு புறநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சி.கே.பாபா நேற்று நிருபர்களிடம் கூறுகையில், கொலை மிரட்டல் நடந்த பகுதி தொட்டபள்ளாப்புரா ஆகும். அதனால் அதுபற்றி நடிகர் பிரதம் புகார் அளித்தால், அதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்படும். இதுவரை அவர் புகார் அளிக்கவில்லை, என்றார். அதுபோல், தர்ஷன் ரசிகர்கள் எனக்கூறிக் கொண்டு தனக்கு மிரட்டல் விடுத்தது குறித்து பிரதமும் போலீசில் புகார் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com