சாராயம் குடிச்ச மாதிரி ஆடாதீங்க... ரசிகர்களை கண்டித்த இயக்குனர் மாரி செல்வராஜ்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள ‘பைசன்’ படம் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் கொடுத்து வருகிறது.
சாராயம் குடிச்ச மாதிரி ஆடாதீங்க... ரசிகர்களை கண்டித்த இயக்குனர் மாரி செல்வராஜ்
Published on

மாரி செல்வராஜ், நடிகர் துருவ் விக்ரமை வைத்து பைசன் என்ற படத்தினை இயக்கியுள்ளார். பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், லால், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ள இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது.பைசன் படம் கடந்த 17ம் தேதி வெளியானது. பைசன் படம் உலகளவில் 4 நாட்களில் ரூ. 18 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பைசன் படத்தை பாராட்டி இயக்குநர் லிங்குசாமி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், நெல்லை ராம் சினிமாஸ் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் 'பைசன்' படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ், நடிகர் துருவ் விக்ரம், நடிகைகள் அனுபமா பரமேஸ்வரன், ரதிஷா விஜயன் உள்ளிட்டோர் கண்டுகளித்ததுடன் ரசிகர்களுடன் கலந்துரையாடினர். படம் பார்த்த ரசிகர்களை சந்திக்கும்போது சில இளைஞர்கள் கூச்சல் போட்டபடியே இருந்தனர்.

இதைக் கண்டு கோபமான மாரி செல்வராஜ், சாராயம் குடித்தது மாதிரி ஆடாதீர்கள். நான் உங்களுக்கு சாராயத்தைக் கொடுக்கவில்லை. புத்தகத்தைத்தான் கொடுத்தேன். என் படத்தை புத்தகமாகப் பாருங்கள். உங்கள் மீது எனக்கு பெரிய அக்கறை இருக்கிறது. அதேபோல், நீங்களும் பிறரை நேசிக்கவும் அடுத்தவரைத் துன்புறுத்தாமலும் வாழ வேண்டும் எனத் தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதுடன் பலரும் மாரி செல்வராஜுக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com