பிறவா புளி, இறவா பனை.. அதிசயம் நிறைந்த பேரூர் பட்டீஸ்வரர் கோவில்

பேரூர் பகுதியில் உள்ள மக்கள், மறுபிறப்பின்றி இறவாத புகழ் உடம்பு பெறுவர் என்பது நம்பிக்கை.
பிறவா புளி, இறவா பனை.. அதிசயம் நிறைந்த பேரூர் பட்டீஸ்வரர் கோவில்
Published on

கோவை மாநகரில் இருந்து மேற்கில் வெள்ளியங்கிரி - சிறுவாணி சாலையில் சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது பேரூர். கிராமத் தென்றல் வீசும் பசுமையான இவ்வூரில் அமைந்துள்ளது பட்டீஸ்வரர் திருக்கோவில். காஞ்சிமாநதி எனும் நொய்யலாற்றின் கரையில் உள்ள இந்தக் கோவிலை முதலாம் நூற்றாண்டில் ஆண்ட கரிகால் சோழன் திருப்பணி செய்துள்ளான் என்பதனால், இக்கோவில் மிகப் பழமையானது என்பதை அறியமுடிகிறது. அதன் பின் இந்த ஆலயத்திற்கு பதினோறாம் நூற்றாண்டில் கொங்குச் சோழர்களும், பிறகு விஜயநகர மன்னர்களும் மண்டபங்கள் கட்டி திருப்பணி செய்ததாக வரலாறு கூறுகிறது.

மரங்களின் சிறப்பு

கிழக்கு நோக்கி எழுந்துள்ள இந்த ஆலயத்தின் முன்பு தென்கிழக்கில் ஒரு புளியமரம் உள்ளது. பிறவாப் புளி என்பது இதன் தனிச் சிறப்பு. ஏனெனில் அதன் கொட்டைகள் செடியாக முளைக்காது. இங்கு சாணத்தில் புழுக்கள் உற்பத்தியாவதில்லை என்பது மற்றொரு பெருமை.

அதே போல கோவிலுக்கு வெளியே வடக்கே சிறிது தூரம் நடந்தால் நொய்யல் நதிக்கரையில் உள்ள பட்டி விநாயகர் கோவிலை தரிசிக்கலாம். அதனை வணங்கிச் சென்றால் வட கயிலாயம் எனும் சிறிய சிவன் கோவில் வரும். அதனருகே உள்ள மிக உயரமான பனைமரம் பல ஆண்டுகளாக உயிர்த்து வாழ்வதால், அதனை, இறவாப் பனை என்று அழைக்கிறார்கள். இந்தப் பகுதியில் உள்ள மக்கள், மறுபிறப்பின்றி இறவாத புகழ் உடம்பு பெறுவர் என்பது நம்பிக்கை. எனவே இத்தலம் முக்தி தலமாகப் போற்றப்படுகிறது. இங்கு ஆதிசங்கரர் தன் தாயின் முக்தி வேண்டி வழிபட்டதாகத் தகவல் தெரிவிக்கிறது.

கோவிலின் தலவிருட்சம் பன்னீர் மரமாகக் கருதப்பட்டு, கோவிலின் உள்ளே மூலவருக்கு பின்புறம் முதல் பிரகாரத்தில் உள்ளது.

கலைக்கூடம்

ராஜகோபுரத்தைத் தரிசித்து விட்டு உள்ளே நுழைந்தால் கொடிமரத்தை தரிசனம் செய்யலாம். அதைத் தொடர்ந்து ஒரு கல் தொட்டிக்குள் நந்திதேவர் இருக்கிறார். அருகே கலை நுணுக்கங்களுடன் கூடிய தெற்கு நோக்கிய நடராஜ மண்டபம் உள்ளது. கனகசபை எனப்படும் இம்மண்டபத்தில் இருபுறமும் உள்ள எட்டு தூண்களிலும், அழகிய வேலைப்பாட்டுடன் அமைந்த நடன கணபதி, ஆறுமுகப்பெருமான், ஊர்த்துவத் தாண்டவக் கோலத்தில் சிவபெருமான், திருவாலங்காட்டு நடன காளி, அக்கினி வீரபத்திரர், அகோர வீரப்பத்திரர், பிச்சாண்டவர், யானைத் தோல் போர்த்திய சிவபெருமான் போன்ற சிற்பங்கள் சிந்தையைக் கவருகின்றன. அண்ணாந்து பார்த்தால் கூரையில் உள்ள தாமரை, ரதி-மன்மதன் போன்ற ஒவியங்கள் உள்ளத்தைத் தொடுகின்றன.

இங்கே எழுந்தருளியுள்ள நடராஜரின் திருஉரு அற்புதமானது மட்டுமல்ல ஆனந்தமானதும் கூட. எல்லாக் கோவில்களிலும் ஆடும் நிலையில் உள்ள நடராசரின் முகபாவம், இங்கே மட்டும் ஆடி முடியப் போகும் நிலையில் உள்ளதைப் போல இருக்கிறது. குனிந்த பார்வையும், கோவைச் செவ்வாயில் குமிழ்சிரிப்பும் கொண்ட நடராஜரின் மேடான கன்னமும், சடையும், தரையை நோக்கித் தாழ்ந்துள்ள கால்களும் சிற்பக்கலையின் சிகரத்தினைத் தொடுவதாக அமைந்துள்ளது. விஷ்ணு, பிரம்மா ஆகிய தெய்வங்களுக்கும், சுந்தரருக்கும் நடராஜர் தாண்டவக் காட்சி கொடுத்துள்ளார். இதனை மேலைச் சிதம்பரம் என்கின்றனர். எனவே இங்கு திருவாதிரைத் திருநாள் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

பட்டீஸ்வரர்

தெய்வப்பசுவான காமதேனு, இத்தலம் வந்து இறைவனை நோக்கித் தவம் செய்தது. அப்போது அதன் கன்றுக் குட்டியான பட்டி அருகில் விளையாடிக் கொண்டிருந்தது. திடீரென்று பட்டியின் ஒரு கால் குளம்பு, அங்கிருந்து புற்றின் உள்ளே அழுந்திக் கொண்டது. எவ்வளவோ முயன்றும் காலை வெளியே எடுக்க முடியவில்லை. இதனால் பட்டி தனது கொம்பால் புற்றினை முட்டியது. அப்போது திடீரென்று புற்றில் இருந்து ரத்தம் கசிந்து வெளிப்பட்டது. புற்றுக்குள் சிவலிங்கம் இருந்தது தெரியவந்தது.

அதே வேளையில், தியான நிலையில் இருந்த காமதேனு கண்விழித்து பார்த்தது. தன் கன்றின் செயலுக்கு வருந்தி, இறைவனைத் தொழுது அழுதது.

அப்போது இறைவன் காட்சி கொடுத்து, குழந்தைகள் செய்யும் தவறை, நாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாதது போல, இப்பசுங்கன்றின் செயலையும் நான் பாதகமாக எடுத்துக் கொள்ளவில்லை. அன்பின் மிகுதியால் எனது திருமேனியில், அதன் குளம்படியையும், கொம்படியையும் தழும்பாக ஏற்றுக் கொண்டோம். இவ்வூர் பட்டிபுரி என்றும், யாம் பட்டீஸ்வரர் என்றும் அழைக்கப் பெறுவோம், என்று அருள் செய்ததாக புராணச் செய்தி ஒன்று கூறுகிறது.

இன்றும் பட்டீஸ்வரர் திருமேனியில் தழும்புகள் உள்ளன. பழம்பெருமை வாய்ந்த பட்டீஸ்வரரை வணங்கிவிட்டு முதல் பிரகாரம் வலம் வரும்போது, நால்வர் உள்ளிட்ட அறுபத்து மூன்று நாயன்மார்களின் சிலாரூபங்கள் தெற்கு மண்டபத்தில் உள்ளன.

மூலவரின் விமான கோஷ்டத்தில் தென்திசை நோக்கி தட்சணாமூர்த்தி, பின்புறம் லிங்கோத்பவர், வடக்கு நோக்கி பிரம்ம தேவர், அருகே துர்க்கை அம்மன் அருள்புரிகின்றனர். கோமுகம் அருகே சண்டீசுவரர் சன்னிதி இருக்கிறது. பிரகாரத்தின் மேற்கு புறத்தில் கணபதியும், தொடர்ந்து வரிசையாக சிவலிங்கங்களும் உள்ளன. அதில் சகஸ்ரநாமலிங்கம் சிறப்பு வாய்ந்தது. வடக்கு மூலையில் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் காட்சி தருகிறார்.

எல்லா கோவில்களிலும் மேற்குநோக்கிய நிலையில் இருக்கும் கால பைரவர், இங்கு மட்டும் தெற்கு நோக்கிய சன்னிதியில், ஞான பைரவர் என்ற நாமத்துடன் அருள்பாலிக்கிறார். இங்கு பைரவருக்கு நாய் வாகனம் இல்லை என்பது தனிச்சிறப்பு. முக்தித்தலம் என்பதால் இவ்வாறு இருப்பதாகக் கூறுகிறார்கள்.

பச்சை நாயகி

சுவாமிக்கு இடதுபுறம் தனிக் கோவிலில் மரகதாம்பிகை என்னும் பச்சை நாயகியாக அம்பாள் மணக்கோலத்தில் திருவருள் செய்கிறாள். அம்பாள் சன்னிதி நுழைவு வாசலின் வலதுபுறம் மனோன்மணி அம்மையும், இடதுபுறம் வரதராஜப் பெருமாளும், மரத்திலான ஆஞ்சநேயரும் காட்சி தருகின்றனர்.

சோமாஸ்கந்த அமைப்பு

முதல் பிரகாரத்தை சுற்றி விட்டு வந்தவுடன் வெளிப்பிரகாரத்தை வலம் வரும்போது, கன்னி மூலை கணபதி கிழக்கு நோக்கி தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார். அங்கே தனிக்கோவிலில் மேற்கு நோக்கிய பாலதண்டாயுதபாணி சுவாமி, பழநியைப் போலவே அழகு கொஞ்ச நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். அவருக்கு வலதுபுறம் தந்தையான விசுவநாதரும், இடதுபுறம் அன்னை விசாலாட்சியும் தனித்தனியே இருக்கின்றனர். இப்படி சோமாஸ்கந்தராக அம்மையப்பருடன் காட்சிதரும் முருகப் பெருமான், வேண்டிய வரம் அருள்பவராக விளங்குகிறார். இவர் கோரக்க சித்தரால் வழிபடப் பெற்று, அருணகிரி நாதரால், இரண்டு திருப்புகழ் பாடல் பெற்றவர் என்பது கூடுதல் சிறப்பு. இங்கே முருகனுக்குரிய அனைத்து விழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com