திருச்செந்தூர் கோவிலில் 6 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

தொடர் விடுமுறையையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் குடும்பத்துடன் குவிந்தனர்.
திருச்செந்தூர் கோவிலில் 6 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
Published on

திருச்செந்தூர்,

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள். இந்த நிலையில் கோவிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 10.30 மணிக்கு உச்சி கால அபிஷேகம், தீபாராதனை, மாலையில் சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது.

தொடர் விடுமுறையையொட்டி நேற்று பல்வேறு ஊர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் கோவிலில் குவிந்தனர். அவர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடினர். பின்னர் நீண்ட வரிசையில் சுமார் 6 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் நகர்ப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது.

அதேபோல் கோவில் வளாகத்தில் நெருக்கடியை குறைக்கும் வகையில் பக்தர்கள் தரிசனத்துக்கு செல்லும் வரிசையில் ஆங்காங்கே தடுப்புகள் அமைக்கப்பட்டு ஒருவருக்கு பின் ஒருவர் செல்லும் வகையில் தரிசன வரிசை அமைக்கப்பட்டிருந்தது. இதனால் பக்தர்கள் எந்தவித நெருக்கடியும் இன்றி சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com