திருச்செந்தூரில் மாசி திருவிழா தேரோட்டம் கோலாகலம்... ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருச்செந்தூரில் மாசி திருவிழா தேரோட்டம் கோலாகலம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
திருச்செந்தூரில் மாசி திருவிழா தேரோட்டம் கோலாகலம்... ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
Published on

திருச்செந்தூர்,

தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 9-ம் திருநாளான நேற்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன.

காலையில் மேலக்கோவிலில் இருந்து சுவாமி அலைவாயுகந்த பெருமானும், குமரவிடங்கபெருமானும் தனித்தனி வெள்ளி குதிரையில் எழுந்தருளி பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள வேட்டை வெளி மண்டபத்தில் திருக்கண் சாத்தியபின் 8 வீதிகளிலும் உலா வந்து மீண்டும் மேலக்கோவில் சென்றனர். நேற்று இரவு குமரவிடங்கபெருமான் சுவாமி தங்க கயிலாய பர்வத வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

மாசித் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருநாள் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, காலை 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், காலை 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. காலை 7 மணிக்கு விநாயகர் தனித்தேரிலும், குமரவிடங்கபெருமான் சுவாமி, வள்ளி தெய்வானை அம்பாள்களுடன் பெரிய தேரிலும், தெய்வானை அம்பாள் தனித்தேரிலும் எழுந்தருளினர்.

"முருகனுக்கு அரோகரா... கந்தனுக்கு அரோகரா... வேலனுக்கு அரோகரா" என்ற கோஷங்கள் முழங்க பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து வருகின்றனர். வெளி வீதி நான்கிலும் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் தேரோட்டத்தை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கோவிலில் குவிந்து உள்ளனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

11-ம் திருநாளான நாளை (வியாழக்கிழமை) மாலையில் மேலக்கோவிலில் இருந்து குமரவிடங்கபெருமான் சுவாமியும், தெய்வானை அம்பாளும் சன்னதி தெருவில் உள்ள யாதவர் மண்டபத்திற்கு எழுந்தருளுகின்றனர். அங்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி, அம்பாள் புஷ்ப சப்பரங்களில் எழுந்தருளி வெளிவீதி வழியாக நெல்லை நகரத்தார் தெப்பக்குளம் மண்டபம் சேர்கிறார்கள். அங்கு இரவு அபிஷேகம், அலங்காரமாகி சுவாமி அம்பாளுடன் தெப்பத்தில் எழுந்தருளி 11 முறை சுற்றும் தெப்ப உற்சவம் நடக்கிறது.

12-ம் திருநாளான நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மாலையில் சுவாமி, அம்பாள் மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் எட்டு வீதிகளிலும் உலா வருகிறார்கள். இரவு சுவாமியும், அம்பாளும் தனித்தனி மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோவிலை சேர்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com